மே 6 2010 பிரித்தானிய பாராளுமன்றம் எதிர்வுகூறப்பட்டது போன்று தொங்கு பாராளுமன்றமாகவே அமையவுள்ளது. பிரித்தானிய மக்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையை வழங்கவில்லை. வழமைக்கு மாறாக இறுதிவரை யார் ஆட்சியை அமைப்பது என்பது முடிவு செய்யப்படவில்லை. கொன்சவேடிவ் கட்சி தனக்கு அடுத்துள்ள தொழிற்கட்சியிலும் பார்க்க கூடுதல் ஆசனங்களைப் பெற்ற போதும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை ஆசனங்களைக் கொண்டிருக்கவில்லை. அதனால் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சி அல்லது கட்சிகளுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
கட்சிகள் பெற்றுள்ள ஆசனங்கள்:
306 : கொன்சவேடிவ் கட்சி
258 : தொழிற்கட்சி
57 : லிபிரல் டெமொகிரட் கட்சி
28 : மற்றைய கட்சிகள்
01 : இன்னும் வெளியாக வேண்டிய ஆசனங்கள் ( வேட்பாளர் ஒருவர் விபத்தில் மரணமடைந்ததை அடுத்து அத்தொகுதிக்கான தேர்தல் மே 27ல் நடைபெறவுள்ளது. )
650 : மொத்த ஆசனங்கள்
326 : பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு வேண்டிய ஆசனங்கள்
அதே சமயம் பிரித்தானிய அரசியலமைப்பின்படி கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாத கட்சியும் குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைப்பதற்கான கோரிக்கையை வைக்கலாம் எனத் தெரிவிக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆட்சியில் உள்ள தொழிற்கட்சி தனது தலைமையில் அரசாங்கத்தை அமைப்பதற்கு முற்பட்டுள்ளது.
ஆட்சியை அமைக்க முற்பட்டுள்ள இரு பிரதான கட்சிகளுக்கும் இதுவரை 50க்கும் சற்று அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ள லிபிரல் டெமொகிரட்டிக் கட்சியின் ஆதரவு அவசியமாகி உள்ளது. இக்கட்சி தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதத்தின் மூலம் முன்னிலைக்கு வந்தபோதும் அது வாக்காளர்களின் தெரிவாக மாற்றப்படவில்லை. தேர்தலுக்கு முன் இடம்பெற்ற கருத்துக் கணிப்புகளில் லிபிரல் டெமொகிரட் கட்சி தொழிற்கட்சியைக் காட்டிலும் அதிக ஆசனங்களைப் பெற்று இரண்டாம் நிலைக்கு வரும் என்றும் கணிப்புகள் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அவை அனைத்தும் தற்போது பொய்யாகி உள்ளது. லிபிரல் டெமொகிரட் கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற ஆசனங்களிலும் குறைந்த ஆசனங்களையே இம்முறை பெற்றுக் கொண்டுள்ளது.
மூன்றாவது பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள லிபிரல் டெமொகிரட் கட்சி தொழிற்கட்சியுடனேயே கொள்கையளவில் பெரும்பாலும் உடன்படக் கூடிய கட்சி. ஆனாலும் கொன்சவேடிவ் கட்சியே கூடுதல் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சி என்ற வகையில் லிபிரல் டெமொகிரட் கட்சி முதலில் கொன்சவேடிவ் கட்சியுடன் எவ்வாறான கொள்கைகளில் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்பது பற்றி ஆராயும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்களுடன் கொள்கை உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையில் தொழிற்கட்சியுடனும் ஏனைய சிறு கட்சிகளுடனும் இணைந்து ஆட்சி அமைக்கலாம்.
1974ற்குப் பின் முதற்தடவையாக தொங்கு பாராளுமன்றம் ஒன்று பிரித்தானியாவில் அமைய உள்ளது. மிகவும் இறுக்கமாக இத்தேர்தல் போட்டி அமைந்ததால் இத்தேர்தலில் வழமைக்கு மாறாக வாக்களிப்பு வீதம் அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. சகல வாக்களிப்பு நிலையங்களில் இரவு 10 மணிக்கு மேலாக மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்ற போதும் வாக்களிப்பு நிலையங்கள் தங்கள் விதிமுறைகளின்படி இரவு 10 மணிக்கு வாக்களிப்பை முடிவுக்கு கொண்டு வந்தனர். அதனால் நூற்றுக் கணக்காணவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் சிறிய எண்ணிக்கையில் தோற்றவர்கள் சில தேர்தல் தொகுதிகளின் வாக்களிப்பு செல்லுபடியற்றதெனக் கோரி சட்ட நடவடிக்கைகளில் இறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இறுக்கமான தேர்தலில் வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் தொடர்ச்சியாக கணிவிழித்திருந்து தேர்தல் முடிவுகளை அவதானித்து இருந்ததால் ஒரு குறுகிய ஓய்வுக்குப் பின்னரே யாருடன் எக்கொள்கைகளின் அடிப்படையில் இணைந்து ஆட்சியை அமைப்பது என்ற முடிவினை எடுக்க வேண்டும் என அவதானிகள் கருத்து வெளியிட்டு உள்ளனர். இதுவரை முன்னிணில் உள்ள இரு கட்சியும் தாங்கள் வெற்றி பெற்றதாகவோ அல்லது தோல்வி அடைந்ததாகவோ தெரிவிக்கவில்லை.
பிரித்தானிய மக்கள் அடுத்த ஆட்சியை யார் அமைக்கப் போகின்றார்கள் என்பதை ஆர்வமுடன் அவதானித்துக் கொண்டுள்ளனர்.