வவுனியா வடக்கில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் படையினர் நிலைகொண்டிருந்த அரச கட்டடங்கள், தனியார் காணிகள் என்பவற்றில் பொது மக்களை மீளக்குடியமர்த்த படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அரச அதிபர் மேலும் கூறினார்.
அந்த வகையில் முதற் கட்டமாக பேயாடிகூழான்குளம் முகாம் அமைந்த பகுதியில் 65 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுள் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் தலா ஒருவர் இன்று திங்கட்கிழமை தமது சொந்த இடத்தை பார்வையிடுவதற்காக முகாம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான படையதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்ட விசேட கூட்டமொன்று கடந்த சனிக்கிழமை வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தின் போதே பாலமோட்டை, சேமமடு ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதென தீர்மானிக்கப் பட்டதாகவும் அதனடிப்படையிலேயே, அவர்கள் தமது சொந்த இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அரச அதிபர் சார்ள்ஸ் கூறினார்.
அத்துடன் பெரியதம்பாணை, பரையநாளன்குளம், பிரம்மநாளன்குளம், கண்ணாட்டி, கணேசபுரம் ஆகிய இடங்களிலும் 500 குடும்பங்கள் விரைவில் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று திங்கட்கிழமை அவர்களது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லப்படவிருப்பதாக அரச அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் பாதுகாப்பு பிரிவினருடன் நடத்திய பேச்சுக்களின் பயனாக வவுனியா பூவரசன்குளம் விமானப் படை முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் பிரப்பன்மடு பகுதியில் 25 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ரத்கத்தேகம பகுதிக்கும் பிறப்பன்மடு பகுதிக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
வவுனியா நிவாரணக் கிராமங்களில் தற்போது முல்லைத்தீவை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் கிளிநொச்சியை சொந்த இடமாக கொண்ட 34 ஆயிரம் பேரும் உள்ளனர். இவர்களுள் 17 ஆயிரம் பேர் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவரெனவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.