அரச வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் வெளிநாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்ய இலங்கை விமானப் படையினரின் விமானங்கள் பயன்படுத்தப்பட விருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உடனடியாக மருந்துகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்டு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான சரக்கு விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளனவெனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரச வைத்திய சாலைகளில் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தொடர்பாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் பாதுகாப்புச் செயலாளரினதும் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, இலங்கை விமானப் படையினரின் விமானங்களை பயன்படுத்தி தேவை யான மருந்துகளை உடனடியாக இறக்குமதி செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களினுள் அரச வைத்திய சாலைகளில் நிலவும் மருந்துகளுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியுமெனவும் சுகாதார அமைச்சு நம்பிடிக்கை தெரிவித்து ள்ளது.
அரச வைத்தியசாலைகளில் 319 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதில் 44 வகையான மருந்துகள் கப்பல் மூலம் இலங்கை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஏனைய 27 வகை மருந்துகள் இலங்கை மருந்தக கவுன்சிலிலிருந்து விலைக்கு வாங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றைத் தவிர்த்த ஏனைய மருந்துகள் இந்தியாவிலிருந்து உடனடியாக கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்படவுள்ளமை இதுவே முதற்தடவை யென்பது குறிப்பிடத்தக்கது.