கொழும்பில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்துகொள்வாரெனவும் ஒருநாள் மட்டும் என்றாலும் அவர் பங்கேற்பார் எனவும் இலங்கை சுற்றுலா சபையின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். சாருக்கானும் ஐஸ்வர்யாராயும் நிச்சயமாக கலந்துகொள்வார்கள். அமிதாப்பச்சனும் வருவார். ஒரு தினத்திற்கு என்றாலும் அவர் வருவார் என்று தன்னை இனம் காட்டவிரும்பாத அதிகாரி “எக்ஸ்பிரஸ்” செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.
ஜூன் 3-5 வரை இடம்பெறும் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழு அளவில் இடம்பெறுகின்றன. இந்த வைபவத்தை ஏற்பாடு செய்திருக்கும் “விஸ் கீராவ்ட் இன்ரர் நஷனல் என்ரர் ரெய்ன்மன்ட் பிரைவேட் லிமிட்டெட்டின்’ சுமார் 50அதிகாரிகள் ஏற்கனவே இங்கு பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே எதிர்ப்பு என்றும் ஏனைய மாநிலங்களிலிருந்து இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டில் வைகோ போன்ற அரசியல்வாதிகளிடமிருந்தே இந்த விழா தொடர்பாக எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுவதாகவும் ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் விடயங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஏனைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சவர்தேச இந்திய திரைப்பட விருது வைபவத்தை இங்கு நடத்துவதால் வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை நாட்டில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பாக அமையும் என்ற கருத்தை இலங்கை உல்லாசப் பயணசபை, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஆனால், இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்பதை தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்க்கின்றன. 2007,2009 காலப்பகுதியில் வடக்கில் இடம்பெற்ற போரை நியாயப்படுத்துவதாக அமையும் என்று தமிழ்நாட்டின் தமிழ்த் தேசியவாத சக்திகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
மும்பையிலுள்ள அமிதாப் பச்சனின் இல்லத்தின் முன் தமிழர்கள் குழு ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து எவரின் உணர்வுகளையும் தான் புண்படுத்தப் போவதில்லையெனவும் ஏற்பாட்டாளர்களுடன் கலந்தாராய்ந்த பின்னர் சகலராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்மானத்தை எடுக்கப்போவதாகவும் அமிதாப்பச்சன் கூறியிருந்தார். இதனையடுத்து திரைப்பட விருது விழாவில் அமிதாப் பச்சன் கலந்துகொள்ளமாட்டார் என்ற விதத்திலான ஊகங்களும் வெளிவந்தன.