இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திரைமறைவில் தொடர்பாடல்கள்

Sambanthan_R_TNAஇனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் திரைமறைவில் தொடர்பாடல்கள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழ்க் கூட்டமைப்பினருடன் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுள்ள தொடர்பாடல்களின் உள்ளடக்கம் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் “த நேஷன்” பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எதனையும் கூறியிருக்கவில்லை. ஆனால், அந்தத் தொடர்பாடல்கள் தற்போது ஆரம்பகட்டத்தில் இருப்பதாக மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் அரச தரப்பிலிருந்து அவருடன் தொடர்பு கொண்ட உறுப்பினர்கள் யார் என்பதைப் பற்றிக் கூட அவர் கூறியிருக்கவில்லை. பெயர்களை வெளியிடுவதற்கு தனக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லையென சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால்,  இந்தத் தொடர்பாடல்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவையல்ல என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான முன்னகர்வில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும் இந்தியாவின் கருத்துக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகவும் நம்பப்படுவதாக த நேஷன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும். ஆனால், அவற்றை பகிர்ந்தளிக்க ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் முன்வந்திருக்கவில்லை. கடந்த காலத்தில் இந்த விடயம் தென்னிலங்கைத் தலைவர்களுக்கு பிரச்சினையாக இருந்துவந்தது. அதேசமயம், பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கப்போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இருதரப்பினரும் கருதியதாக சம்பந்தன் கூறியுள்ளார். மங்கள முனசிங்க தெரிவுக் குழுவிலிருந்து 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த யோசனைகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்திலான யுத்த நிறுத்த உடன்படிக்கை காலகட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் போன்ற பேச்சுவார்த்தைகளின் போது 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதென ஆராயப்பட்டதாக சம்பந்தன் கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் சம்பந்தன்; அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனமும் இயங்குவதற்கு பொலிஸ் அதிகாரங்கள் முற்றுமுழுதாக அவசியமானவை என்று கூறியுள்ளார். “பொலிஸார் தங்களது அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்துகின்றார்களா? பொலிஸ் படை மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸ் சேவையில் ஏதாவது நம்பிக்கையை நாங்கள் கொண்டிருக்க முடியுமென நீங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது தொடர்பாக எம்மிடம் தெளிவான கொள்கை இருக்கவேண்டும். நாட்டைப் பிரிப்பதற்காக நாங்கள் பொலிஸ் அதிகாரத்தை கோரவில்லை. ஆள்வதற்கான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய தேவை உள்ளது. பொலிஸ் அதிகாரங்கள் அடிப்படை அம்சமாகும். அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைக் கொண்டுள்ள ஒவ்வொரு நாட்டிலுமே இது காணப்படுகிறது” என்று சம்பந்தன் வலியுறுத்தி தெரிவித்திருக்கிறார்.

காணி அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சம்பந்தன் 1957 இல் மேற்கொள்ளப்பட்ட பண்டாரநாயக்காசெல்வநாயகம் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயத்தை அவர்களால் ஏன் வழங்கமுடியாது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“பண்டாரநாயக்கா போன்ற ஆளுமை உள்ள தலைவரால் இந்த உடன்படிக்கை 1957 இல் கைச்சாத்திடப்பட்டது. அவர் இந்த நாட்டின் உயர்ந்த தலைவர்களின் ஒருவராகும். அத்துடன் அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் குருவாகும். 1957 இல் பண்டாரநாயக்கா வழங்க முன்வந்ததை ஏன் கொடுக்க முடியாது%27 என்றும் சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மையாகவும் நம்பிக்கையாகவும் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் ஆயத்தமாக இருப்பதாகவும் அரசாங்கம் தங்களை நம்பவேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். “நாங்கள் மிதவாத தமிழ் அரசியல் கட்சியினராகும். வட, கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18 தமிழ் எம்.பி.க்களில் 14 பேர் எமது கட்சியிலிருந்து வந்துள்ளனர். கடும்போக்கு சக்திகளின் கருத்துகளை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எமது விஞ்ஞாபனத்தில் கடும்போக்கான நிலைப்பாடுகள் இருக்கவேண்டுமென அவர்கள் விரும்பியிருந்தனர். ஆனால், நாங்கள் அவற்றை நீக்கிவிட்டோம். தேர்தலில் அவர்கள் யாவரும் தோற்றுவிட்டனர். நம்பிக்கையில்லாத ஆட்களுக்கு நாங்கள் நியமனப் பத்திரங்களை வழங்கியிருக்கவில்லை. அவர்கள் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு போட்டியிட்டனர். அவர்கள் ஒவ்வொருவருமே தேர்தலில் தோற்றுவிட்டனர். ஆகவே, நாங்கள் மிகவும் நேர்மையுடனும் வெளிப்படையாகவும் செயற்பட்டிருந்தோம்.

கடந்த காலத்தில் கூட செல்வநாயகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தரப்பானது 100% நேர்மையாக இருந்ததாக சம்பந்தன் நினைவுகூர்ந்திருக்கிறார். 1970 தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெடரல் கட்சியானது பிரிவினைவாதத்தை எந்த வேட்பாளராவது அல்லது கட்சியாவது வரித்துக்கொண்டால் அவர்களுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு பெடரல் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அவற்றை எமது விஞ்ஞாபனத்தில் நாம் எழுத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதுவே எமது நேர்மைத் தன்மையாகும்.

தீர்வொன்றைக் காண்பதற்கு நீண்டகாலம் எடுக்காது. அதுதொடர்பாக ஜனாதிபதி துரிதமாக செயற்பட வேண்டும். அவரால் எமது ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். அவருடன் மிகவும் நேர்மையாக நாங்கள் இருப்போம். அவரை நாங்கள் ஏமாற்றமாட்டோம். நாங்கள் சிங்கள மக்களை ஏமாற்றமாட்டோம்” என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

நன்றி-தினக்குரல்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *