வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இலங்கை வீடமைப்புத்திட்ட செயற்பாட்டில் தேசிய திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறினார். முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மாங்குளத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காணியில் நேற்றுக் காலை அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த அலுவலகம் 10 மில்லியன் ரூபாசெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதேவேளை, துணுக்காய் பகுதியில் மீள்குடியேறிய மக்களை நேரில் சென்று பார்வையிட்ட விமல் வீரவன்ஸ், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.