ஓர் அமைச்சராக அல்லாமல் ஊடகவியலாளர்களுடன் சிறந்த நட்புறவைப் பேணி பணியாற்றுவதே எனது நோக்கமாகுமென்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டை வெற்றியடையச் செய்யும் பயணத்தில் அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு நேற்று (11) விஜயம் செய்திருந்த அமைச்சர் ரம்புக்வெல்ல, நிறுவனத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார பதவியேற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அமைச்சருடன் தகவல், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கனேகலவும் கலந்து கொண்டார்.
நிறுவனத் தலைவர் பத்மகுமார, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மத்தியில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், ‘அமைச்சர், தலைவர் என்ற அடிப்படையில் அல்லாமல் சுமுகமான உறவைப் பேணி செயற்படவே விரும்புகிறேன். பெரிய அளவில் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட சுமுகமாகத் தீர்த்துவிடலாம். திறந்த மனசுடன் வெளிப்படையாகப் பணியாற்றுவதே எனது நோக்கம். நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றும் பாரிய பொறுப்பு நமக்குண்டு. அதனை உணர்ந்து அனைவரும் செயற்படவேண்டும். எவர் எதைச் செய்தாலும் இறுதியில் அனைத்துப் பொறுப்பும் அமைச்சரின் மீதுதான் சுமத்தப்படும்.
எனவே, புரிந்துணர்வுடன் செயற்பட்டால் நாம் நீண்ட தூரம் பயணிக்க முடியும். பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளராக இருந்தபோது நான் அதனைத் தொழிலாகவோ, கடமையாகவோ அன்றி எனக்குச் சரியெனப்பட்டதைச் செய்தேன். பயங்கரவாதம் நாட்டுக்குத் தீங்கானது என்பதை உணர்ந்து செயலாற்றினேன். அதனால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானேன். ஆனால் ஈற்றில் நான் சொன்னதுதான் உண்மையானது” என்றும் அமைச்சர் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.