மத்திய மாகாண தமிழ்க் கல்வி, இந்துக் கலாசார கைத்தொழில் அமைச்சராக அனுஷியா சிவராஜா நேற்று புதன்கிழமை மத்திய மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இவ்வைபவத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.
அனுஷியா சிவராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி சங்க உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான அண்ணாமலையின் புதல்வியாவார். இவரது கணவர் சிவராஜா நுவரெலியா மாநகர சபைப் பிரதி மேயராக கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றம் சென்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து மத்திய மாகாண அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். அத்துடன் நேற்று புதன்கிழமை மத்திய மாகாண விவசாய அமைச்சராக நிமல் பியதிஸ்ஸவும் சுகாதார அமைச்சராக சுனில் அமரதுங்கவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.