முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா முதல் தடவையாக நேற்று புதன்கிழமை சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதுடன் வன்முறைகளைத் தூண்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது இராணுவத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகா வெவ்வேறான இராணுவ நீதிமன்ற விசாரணைகளையும் எதிர்கொண்டுள்ளார்.பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக அவர் கருத்துகளைத் தெரிவித்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொன்சேகா நேற்று கொழும்பு பிரதம நீதிவான் சம்பா ராஜரட்ண முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த வருடம் சரணடைந்த தமிழ் புலிகளைக் கொல்லுமாறு ஜனாதிபதியின் இளைய சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்ததாகப் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டைப் பொலிஸ் விசாரணையாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளனர். பத்திரிகை தன்னை தவறாக மேற்கோள் காட்டியிருந்ததாக பொன்சேகா கூறுகிறார். இந்த மனு மீதான விசாரணை மே 26 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.