யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் கூடுதலான நாடுகள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளன. வடக்கு, கிழக்கு பிரதேச அபிவிருத்தியை துரிதப்படுத்தும் நோக்குடன் அப்பகுதியில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கவுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஏ. எம். சி. குலசேகர கூறினார்.
ஓமந்தை, மாங்குளம் ஆகிய பகுதிகளில் தலா 400 ஏக்கர் நிலப்பரப்பில் இரு பொருளாதார வலயங்களை அமைப்பதற்கான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளிலும் பொருளாதார வலயங்கள் அமைப்பதற்கான காணிகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-கடந்த காலங்களில் நாட்டின் 2/3 பகுதியில் மீன்பிடித்துறையில் ஈடுபட முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், இன்று முழு நாட்டிலும் மீன்பிடிக்கவும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும், சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் விவசாயத்துறையும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். இப் பகுதியில் முதலீடு செய்பவர்களுக்கு 15 முதல் 20 வருட வரி விலக்கு வழங்கப்படுவதோடு தீர்வையற்ற முறையில் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்களை தருவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் முதலீடு செய்வதற்கு பல முதலீட்டாளர்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனையின் கீழ் 12 பொருளாதார வலயங்கள் நாடு பூராவும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார வலயங்களில் பல்வேறு கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்படும் என்றார்.