மகிந்த ராஜபக்ச அரசின் புதிய அறிவிப்பான தேசிய நல்லிணக்க ஆணைக்கழு என்பது சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் கூறியுள்ளார். இது காலத்தை இழுத்தடிக்கும் ‘பம்மாத்து’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைகளுக்கான அடிப்படைகளை ஆராய்ந்து தேசிய நல்லிணக்கம் காண்பதற்காக அரசினால் ஏழு பேர் கொண்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியினால் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரவிக்கும் போதே திரு. அரிய நேத்திரன் இவ்வாறு கூறினார்.
“இலங்கை சுந்திரம் அடைந்ததாக கூறப்படும் 1948ஆம் ஆண்டு தொடக்கம் 61 வருடங்களாக பல்வேறு ஒப்பந்தங்களை தமிழ் மக்களுடன் செய்து கொண்ட தெற்குத் தலைமைகள் இப்போது தமிழர்களின் பிரச்சினை குறித்து ஆராய ஆனைக்குழு நியமிக்க முன்வருவது வேடிக்கையான விடயமாகும். செல்வா – பண்டா ஒப்பந்தம், செல்வா – டட்லி ஒப்பந்தம் என இரு ஒப்பந்தங்கள் பிரதான இரு கட்சிகளுடன் செய்யப்பட்டன. அதன் பின்னர், திம்பு பேச்சவார்த்தை, இலங்கை இந்திய ஒப்பந்தம், விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், தன்னாட்சி அதிகாரசபை யோசனை, சுனாமி மீள் கட்டமைப்பு உடன்பாடு, அனைத்துக்கட்சி தெரிவுக்குழு, நிபுணர் குழு என்றெல்லாம் காலத்திற்குக் காலம் எத்தனையோ ஒப்பந்தங்கள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
கடந்த 61 ஆண்டுகளாக இவ்வாறு வந்து போன உடன்பாடுகள் மூலம் தமிழர் பிரச்சினைக்கான மூலகாரணத்தை கண்டறிய முடியாத அரசு இப்போது தமிழர் பிரச்சனைகளை ஆராய்வதற்காக நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிக்கவிருப்பது காலத்தை இழுத்தடிக்கவும், தமிழர்களையும், இந்தியா உட்பட சாவ்தேசத்தையும் ஏமாற்றுவதற்கேயாகும், அத்தோடு நடைபெறவுள்ள வடமாகாண சபைத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடனானதுமாகும்” எனவும் திரு.பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.