இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது 2 இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
2 இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளை மீள நிர்மாணிக்க வேண்டிய தேவையிருப்பதாக அரசாங்க மற்றும் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர் என்றுசர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.
தற்போது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வதற்கு விடுவிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரிக் கிராமங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 80,246 பேர் தொடர்ந்து இருக்கின்றனர். புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கிறது.