தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஏழு அங்கத்தினர் ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
சகல இனங்களையும் பல்கலாசாரத்தையும் பிரதிபலிப்பதான இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியும் ஓய்வுபெற்ற சட்ட மா அதிபருமான சித்தரஞ்சன் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தினர்களாக கலாநிதி ரொஹான் பெரேரா, எச். எம். ஜி. எஸ். பலிகக்கார, பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி, சி. சண்முகம், திருமதி மனோராமநாதன், மெக்ஸ்வெல் பரனகம ஆகியோரும் நியமிக்கப்பட் டுள்ளனர்.
நாட்டின் சகல சமூகங்களினதும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டதாகச் செயற்படும் இவ்வாணைக்குழுவானது அது தொடர்பான விடயங்களை விசாரணை செய்து அதன் அறிக்கையையும் விதப்புரைகளையும் ஆறு மாத காலத்திற்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
சகல அரசாங்க ஊழியர்களும் நபர்களும் தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பினையும் இதற்கு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். ஆணைக்குழுக்கள் விசாரணைச் சட்டத்தின் 14ம் பிரிவின் 393ம் அத்தியாயத்தின் கீழான விதிகளுக்கிணங்க இவ்வாணைக்குழு இயங்கும்.
இவ்வாணைக்குழுவில் அங்கத்தவரான டாக்டர் ரொஹான் பெரேரா வெளி விவகார அமைச்சின் சட்ட ஆலோசகரும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவுக்கு ஆசிய பிராந்தியத்திற்காக ஒதுக்கப்பட்ட ஏழு ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்காக ஐ. நா. பொதுச்சபையினால் வேட்பாளராக நியமிக்கப்பட்டவராவார்.
எச். எம். ஜீ. எஸ். பலிகக்கார ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியாகப் பணிபுரிந்தவராவார்.
பேராசிரியர் எம். ரீ. எம். ஜிப்ரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் பிரதித் தலைவராவார்.
சி. சண்முகம் முன்னாள் திறைசேரியின் செயலாளராவார்.
திருமதி மனோ இராமநாதன் முன்னாள் நீதியரசர் பி. ராமநாதனின் மனைவியும் பிரதி சட்ட வரைஞராகப் பணியாற்றுபவருமாவார். மெக்ஸ்வெல் பரணகம முன்னாள் மேல் நீதிமன்ற நீதியரசர்.