பாரிய அபிவிருத்திகள் தொடர்பான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கும் வகையில் ஜீ-15 அமைப்பானது ஜீ-08 அமைப்புடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையினை உண்மையானதாகவும் யதார்த்தமுள்ளதாகவும் ஆக்குவதற்கு தெளிவான முறையொன்று தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற ஜீ-15 அமைப்பின் அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தி செயற்பாட்டை தோற்றுவிப்பதற்காக பொருளாதாரம், நிதி, விஞ்ஞானம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து துறைகளிலும் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்புவதற்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலுள்ள திறமைசாலிகள் மற்றும் தனிப்பட்ட அனுபவசாலிகளைக் கொண்ட செயற்பாட்டு படையொன்றை நியமிப்பது பொருத்தமானதெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஈரான் இஸ்லாமிய குடிய ரசுக்குப் பின் ஜீ-15 அமைப்பின் தலைமையை இலங்கை பொறுப்பேற்பது மிகவும் மகிழ்ச்சியுடனேயேயாகும். அடுத்த ஆண்டு இந்த அமைப்பின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு நாம் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளோம். கடந்த காலங்களில் இந்த அமைப்புக்கு மிகவும் திறமையாக வழிகாட்டி வந்த கலாநிதி, மஹ்மூத் அஹ்மட் நெஜாட்டுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.
தெற்கின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஜீ-15 அமைப்பு மற்றும் அந்தத் துறையின் சம்பிரதாயங்களை தொடர்ந்து மேற்கொள்வ தற்கு வழிகாட்டிய உங்களுடைய அர்ப்பணிப் பான சேவைக்கு நாம் மதிப்பளிக்கிறோம்.
எவ்வாறாயினும் எமது இந்த அமைப்புக்கு புனர்வாழ்வளித்து அதனைத் தொடர்ந்து முன்நோக்கி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை இருப்பதாக நான் நம்புகிறேன். நாம் இப்போது ஒரு சுற்றுவட்டத்தை முடித்துக் கொண்டுள்ளோம். எங்களது அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது சர்வதேச பொருளாதார மற்றும் அரசியலில் மாற்றம் ஏற்பட்ட ஒரு யுகத்திலாகும். நாங்கள் இன்று 20 வருடத்தை பூர்த்தி செய்வது இந்த பூகோளமயம் மாற்றமடைகின்ற சந்தர்ப்பத்திலாகும்.
சவால்களைக் கொண்ட சூழ்நிலை, நீண்ட எதிர்காலத்துக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. நாங்கள் முதன்மை வழங்கக் கூடிய துறைகள் அநேகமானவை. பிணக்கு முடிவடைந்தாலும் எங்களால் கட்டியெழுப்பப்பட வேண்டியவை இன்னமும் முடிவடையவில்லை.
உலகெங்கும் நடைபெறுகின்ற இயற்கை அழிவுகளை சுட்டிக் காட்டுவது காலநிலை விபரீதங்களை நிர்வகிப்பதற்கு பூகோள ரீதியாக நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். அதற்கிடையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற அபிவிருத்தி சவால்கள் ஏராளமானவை. அவை வறுமையொழிப்பு, பட்டினியொழிப்பு, அனைவருக்கும் கல்வி, சுகாதார சேவையை பெற்றுக் கொடுத்தல் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பனவாகும். நான் கூறிக் கொள்வதென்னவென்றால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எங்கள் அமைப்புக்குள் தீர்வுகள் இருப்பதாக நான் நம்பவில்லை. எனினும் செல்வச் செழிப்பு மிக்க மிக ஒற்றுமையான எங்கள் அமைப்புக்கூடாக நீண்டகால நோக்கங்களை நிறைவேற்றுவதற்குரிய விசேட நடவடிக்கை எடுக்கலாமென்பது எனது நம்பிக்கையாகும்.
தலைமைப் பொறுப்பை கையேற்ற இந்த சந்தர்ப்பத்தில் ஜீ-15 நாடுகளின் குரல் சர்வதேச ரீதியில் பலமாக ஒலிப்பதற்கு வழிவகை செய்வேன் என அவர் உறுதியளித்தார். இச் செயற்பாடுகளின் மூலம் இலங்கைக்கு அங்கத்துவ நாடுகளின் பூரண ஒத்துழைப்பு கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.