அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசமான வலி.வடக்கில் மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இரு வாரங்களில் சாதகமான முடிவெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்துள்ளனர். வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (May 17 2010) தெல்லிப்பழையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஆர்.சி நடராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எஸ். சிறிதரன், ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து செயற்பட கூட்டமைப்பு தயாராக இருப்பதாக மாவை சேனாதிராசா இக்கூட்டத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் சகலரும் இணைந்து செயற்பட முன்வந்தால், தானும் பங்களிப்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் இது குறித்த முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, இக்கூட்டத்தில் தலைமையுரை நிகழ்த்திய வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் சங்கத்தின தலைவர் ஆர்.சி. நடராசா குறிப்படுகையில் வலி.வடக்கு மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கமாக முடிவை அறிவிக்காவிடில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாகள் ஒன்பது பேருக்கும் எதிராக போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.