5 இலட்சம் பேர் பாதிப்பு; உயிரிழப்பு 18 ஆக அதிகரிப்பு

coio.jpgமேல் மாகாணம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் தொகை சுமார் 5 இலட்சம் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதோடு ஆறு பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 1734 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ளத்தினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது தவிர இரத்தினபுரி, புத்தளம், கேகாலை, குருநாகல், திருகோணமலை, மாத்தறை, அநுராதபுரம், நுவரெலியா ஆகிய மாவட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
coio.jpgகடும் காற்றுடன் கூடிய மழையை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் கூறியது. வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள சூறாவளி இலங்கையை தாண்டி நகர்வதால் இலங்கைக்கு சூறாவளி அபாயம் ஏற்படாது என அவதான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் இந்தத் தாக்கத்தினால் எதிர்வரும் தினங்களிலும் கடும் காற்று வீசும் எனவும் இதனால், எதிர்வரும் தினங்களிலும் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். மேல், மத்திய, தென்பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில், நேற்று ஓரளவு குறைவாக மழை பெய்துள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருகிற போதிலும் ஜின் கங்கை மற்றும் களுகங்கை நீர் மட்டங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பிரதான வீதிகளில் நேற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. ராகம, ஹுணுப்பிட்டிய, வல்பொல ரயில் பாதைகளில் நீர் நிறைந்திருந்ததால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாணந்துறை பகுதியில் ரயில் பாதையில் நீர் நிறைந்திருந்ததால் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்திருந்தன. பாரிய மண் திட்டு விழுந்ததால் காலி- மாத்தறை இடையிலான ரயில் சேவை நேற்றும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணங்கள் வழங்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. சில பகுதிகளில் 4-5 அடி உயரத்திற்கு வெள்ளம் காணப்படுவதால் உலர் உணவு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாதுகாப்புப்படையினரும் பொலிஸாரும் சிவில் அமைப்புகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *