மலைய கத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையின் காரணமாகவும், மண்சரிவு அபாயம் உள்ளதனாலும் நுவரெலியா மாவட்டம் திடீர் அனர்த்தம் ஏற்படும் மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகமும் வானிலை அவதான நிலையமும் விடுத்துள்ள எச்சரிக்கைகளை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ பீ. ஜி. குமாரசிறி ‘தினகரனு’க்குத் தெரிவித்தார். அதேவேளை, பிரதேச செயலாளர்கள், கிராமசேவை அலுவலர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் சாமிமலை, கவுரகலை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரமாகவுள்ள கவுரகலையில் 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தற்காலிகமாக பொதுக் கட்டடமொன்றில் தங்க வைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படு கின்றது.
இதேநேரம், கினிஸ்தன்னை பிளக் வோட்டர் பகுதியில் மண்சரிவு ஏற் பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியிலிருந்து சில குடும்பங்கள் அப்பு றப்படுத்தப்பட்டுள்ளன. கொத்மலை, பூண்டுலோயா – தவலந்தன்னை வீதியிலும் மண்சரிவு ஏற்பட்டதால் அந்தப் பகுதியிலிருந்து ஒரு குடும்பம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழைபெய்தால் நுவரெலியாவுக்கான புதிய வீதியின் 52ஆம் மைல்கல் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அரசாங்க அதிபர் குமாரசிறி தெரிவித்தார்.
மண்சரிவு, வெள்ளப்பெருக்கு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவென எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். பிரதேச செயலாளர்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகலரையும் நுவரெலியா மாவட்டச் செயலகத்துக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது இவ்வாறிருக்க அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக இந்தப் பகுதிகளில் உள்ள நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப் பிரதேசத்தில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.