புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு (100) பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் இந்த நூறு பேரும் எதிர்வரும் 31ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் அபரல்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களிலிருந்து ஆடை இயந்திர துறையில் பயிற்சி பெற்ற நூறு பேர் இதற்காக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருபவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய பின்னர் தனியார் துறையில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். தற்போது வழங்கப்பட வுள்ள தொழில் வாய்ப்பு தொடர்பாக குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னரே தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.