இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள சகல மக்களையும் எதிர்வரும் மூன்று மாத காலத்தில் மீள்குடியேற் றுவதுடன் மீள் குடியேற்ற பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை துரிதமாக மேற்கொள்வதாகவும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
துரித மீள்குடியேற்றம் தொடர்பான விசேட உயர்மட்ட மாநாடு நேற்று வவுனியாவில் நடைபெற்றது. அமைச்சர்கள் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ள இம் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் அதற்குரிய நடவடிக் கைகளைத் துரிதப்படுத்துமாறும் சம்பந் தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
மீள் குடியேற்ற அமைச்சர் மில்றோய் பெர்னாண்டோ தலைமையிலான உயர் மட்டக் குழுவொன்று நேற்று வன்னிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தது. இக் குழு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கான தேவைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன் இவற்றை முறையாகச் செயற்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு ஒன்றையும் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடத்தியுள்ளது.
இம்மாநாட்டில் அமைச்சர்கள் மில்றோய் பெர்னாண்டோ, ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வன்னி மாவட்ட எம். பி. நூர்தீன் மசூர், வவுனியா கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர், திணைக்களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள வன்னி மாவட்ட மக்களை துரிதமாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது சம்பந்தமாக இம் மாநாட்டில் முக்கிய கவனமெடுக்கப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றம் இடம்பெறும் பிரதேசங்களின் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை மூன்று மாத காலத்திற்குள் மீள்குடியேற்றுவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ மூன்று மாத காலத்தில் சகல மக்களையும் மீளக் குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்கான நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுதுதல், மீள் குடியேற்றம் தொடர்பில் 2010ம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்தும் இம் மாநாட்டின் போது ஆராயப் பட்டுள்ளதுடன் மீள் குடியேற்றப்படும் மக்களுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள், வீடுகளை அமைப்பதற்கு வழங்க வேண்டிய உதவிகள் சம்பந்தமாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் பணிப்புரைகளை விடுத்துள்ளனர். செட்டிக்குளம் பிரதேச மக்களின் சுகாதார, பாதுகாப்பு சம்பந்தமாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் சகல குறைபாடுகளையும் துரிதமாக நிவர்த்திக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மில்ரோய் உறுதியளித்தார்.
இம் மாநாட்டின் பின் அமைச்சர்கள் மடுத் திருத்தலதிற்கும் விஜயம் செய்ததுடன் அதனை அண்டிய பிரதேசங்களின் நிலைமைகளையும் நேரில் பார்வை யிட்டுள்ளனர்.