ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக மூன்றாவது இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்துவதற்கான கோரிக்கையை விடுப்பது தொடர்பான அறிக்கையொன்று விரைவில் இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத் தளபதியாக இருந்த காலகட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கேள்வி மனுக்கோரல்களை முன்னெடுத்த குற்றச்சாட்டின் பேரிலேயே மூன்றாவது இராணுவ நீதிமன்ற விசாரணையை நடத்துவதற்குக் கோரும் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி “டெய்லி மிரர்’ இணையத்தளம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான கோப்புகள் ஏற்கனவே ஆராயப்பட்டுள்ளன. அறிக்கையானது தற்போதைய இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. மூன்று மாதங்களுக்கிடையில் மூன்றாவது இராணுவ நீதிமன்றத்தை அமைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
சீருடையில் இருந்தவேளை அரசியலில் ஈடுபட்டமை மற்றும் ராஜபக்ஷவுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எதிராக சதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்ற விசரணை இடம்பெறுகிறது.
இராணுவத் தளபாடக் கொள்வனவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக இராண்டாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.