மலை யகத்தில் உள்ள பொதுநிர்வாக உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான மலையக அமைப்புகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளின் எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான ஆலோசனைகளை எதிர்வரும் 31ஆம் திகதி எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் – பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
இரத்தினபுரி, கண்டி, பதுளை, மாத்தளை ஆகிய மாவட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு மாத காலம் அவகாசம் கோரவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். மலையகத்தில் தமிழ் மக்கள் மிகச் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபை, மாகாண சபை, பாராளுமன்றம் ஆகியவற்றுக்குக் கணிசமான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று தான் இங்கு குறிப்பிட்ட ஏனைய மாவட்டங்களிலும்,
எவ்வாறாயினும், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளே உள்ளன. இதனைப் பன்னிரண்டாக அதிகரிக்க வேண்டுமென இ. தொ. கா. தலைமையில் கூடி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மலையக மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புகளைத் தோற்றுவிக்க முடியும் என பிரதியமைச்சர் சிவலிங்கம் கூறினார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் ஒரு மாத காலத்தில் யோசனை வரைவு தயாரிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். தேர்தல் தொகுதி, உள்ளூராட்சி மன்ற எல்லை ஆகியவற்றின் திருத்தங்களுடன் கூடிய அரசியலமைப்பு மாற்றத்தை எதிர்வரும் ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை தெரிந்ததே.