இலங் கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் குழுவை அமைப்பதற்கு பிரிட்டன் ஆதரவளித்துள்ளது.
இந்தவார முற்பகுதியில் ஐ.நா.வுக்கான பிரிட்டிஷ் தூதுவர் லியோல் கிரான்ட் ஐ.நா. செயலாளர் நாயகத்தைச் சந்தித்திருந்தார். இச்சந்திப்பின்போது செயலாளர் நாயகத்திடம் இலங்கை விவகாரம் குறித்துப் பேசியிருந்ததாக தூதுவர் ஐ.நா.வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸுக்குக் கூறியுள்ளார்.
சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தெடார்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்கான பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகளுக்காக பான் கீ மூன் தெரிவித்திருக்கும் யோசனைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் முழுமையாக ஆதரித்திருப்பதாக தூதுவர் லியோல் கிரான்ட் கூறியுள்ளார். இதில் நிபுணர் குழு யோசனையும் உள்ளடங்கியிருக்கிறதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கோர்டன் பிறவுண் மற்றும் அவரின் வெளிவிவகார அமைச்சராகவிருந்த டேவிட் மில்லிபான்ட் ஆகியோரிடமிருந்த அதிகாரம் இப்போது கமரோன், கிளெக், ஹேக்கிடம் கைமாறியுள்ளது. மில்லிபான்ட் இப்போது தொழில் கட்சித் தலைமைக்கு போட்டியிடுகிறார்.