போர் நடவடிக்கைகளால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை 2கோடியே 50இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு 28 May 2010 முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலை புனரமைப்பிற்கான நிதி யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா கட்டட புனரமைப்பிற்கும், ஒரு கோடி ரூபா உபகரணங்கள் கொள்வனவிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வைத்தியசாலைக்கான விசேட வாகனங்கள் ஐந்தும் யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலையின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, றிசாத்பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி வைத்தியசாலையின் விடுதிகள், உபகரணங்கள் பலவும் சேதமாகின. எனினும் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்ததும் ஓரளவிலான பணிகளை பொதுமக்களுக்கு இவ்வைத்தியசாலை மேற்கொண்டு வந்தது. தற்போது புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முன்னரைப் போல் இவ்வைத்தியசாலை செயற்படக் கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.