கிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் விநியோகம் மேற்கொள்வது குறித்து கடந்த சில காலமாக ஆராயப்படுட்டு வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக மேற்கொள்ளப்பட்ட பின்பே யாழ். குடாநாட்டிற்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தீhமானிக்கப்பட்டுள்ளது.
இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்வது தொடர்பாக நேற்று (29 May 2010) யாழ். மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கருத்துப் பரிமாறல் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதில் நடாளுமன்றக் குழுக்களின் தலைவர் மு.சந்திரகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், அ.விநாயகமூர்த்தி, ஐக்கிய தேசயக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி சு.பரமராஜா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், தேசிய நீர்வழங்கல் அதிகாரசபை நிர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள். யாழ். மாநகர முதல்வர் திருமதி. ப. யோகேஸ்வரி, நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி உட்பட ஏனைய பகுதி மக்களுக்கான நீர் விநியோகம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டுக்கு இரணைமடுக் குளத்திலிருந்து நீர்விநியோகம் செய்வது குறித்து ஆராய்வதே முக்கியமானது என்கிற கருத்து அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டது. யாழ். குடாநாட்டிற்கான குறித்த நீர்விநியோகத் திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரது கருத்துக்களின் நிறைவில் தொகுப்புரை நிகழ்த்திய அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கிளிநொச்சி மக்களுக்கான நீர்விநியோகம் முழுமையாக்கப்படாமல் இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்.மாவட்டத்திற்கான நீர்விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்தார். அத்துடன் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்படும் எனவும், கிளிநொச்சி மக்களுடன் இணைந்து மற்றுமொரு கூட்டத்தை ஏற்பாடு செய்து இது தொடர்பில் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.