முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் மக்களின் குடியேற்றம் முழுமை பெற்றதும் திருமுறிகண்டி ஆலய நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகளிடமே ஒப்படைக்கப்படும். அதுவரை ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பிற்கமைய தற்காலிக ஏற்பாடாக இந்து கலாசார நிதியம், முல்லைத்தீவு அரச அதிபர், பிரதேச செயலாளர் அடங்கிய பரிபாலன சபையே ஆலயத்தை நிர்வகித்து வருமென இந்துசமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் தெரிவித்துள்ளார்.
இவ்வாலயத்தை அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதும் ஆலய நிதியை அரசு கையாள்கிறது என்பதும் தவறான கருத்தாகுமென இந்து சமய இந்து கலாசார திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு – யாழ். ஏ-9 பாதையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திருமுறிகண்டியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானின் ஆலய நிர்வாகம் தொடர்பாக தவறான கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. உண்மை நிலையை விளக்கும் பொருட்டு இந்து சமய இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த வருடம் யுத்தம் முடிவுற்ற பின்னர் ஏ-9 பாதை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து ஆரம்பமானவுடன் திருமுறிகண்டி ஆலயத்தை பொதுமக்கள் தரிசித்துச் செல்லவேண்டும் என்ற தொடர்ச்சியான கோரிக்கைகள் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இவ்வாலயத்துக்கென குருக்கள் ஒருவரை நியமித்து முறையான பூஜைகளை நடத்தும் ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்குப் பணிப்புரை வழங்கப்பட்டது.
அதற்கமைவாகவே குருக்கள் ஒருவர் நியமிக்கப்பட்டு வழமையான பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சூழலை முகாமை செய்து கொள்வதற்காக திணைக்களத்தின் மூலம் முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.