முல் லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டு அதனை துரிதப்படுத்தும் பொருட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளனர்.
வட மாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் தலைவர் என்ற வகையில் நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களின் நிலைமையை பார்வையிடும் அவர் முதற் தடவையாக முல்லைத்தீவுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பாரிய வேலைத் திட்டங்கள் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் அதனை துரிதப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார். வடக்கிற்கான அவசர மீட்புத் திட்டத்தின் கீழ் நெடுங்கேணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பார்வையிடவுள்ளார். வேலைத் திட்டத்திற்கான பணம் என்ற அமைப்பில் கிராம அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட திட்டங்களை ஆரம்பிக்கவுள்ள துடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கவுள்ளார்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர் விவசாயத்துறை அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய அபிவிருத்தி திணைக்கள கட்டடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், திருமதி இமெல்டா சுகுமார் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.