வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கவென அமைக்கப்படவிருக்கும் பாரிய உத்தேச கால்வாய் திட்டத்திற்கு நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் உலக வங்கியின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி கலாநிதி நெவ்கோ இஷிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
வட பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர்த் தேவையை நிவர்த்திக்கவென வடக்குக்கான பாரிய கால்வாய் அபிவிருத்தி திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வவுனிக்குளம் நீர்த்தேக்கத்திற்கு இக் கால்வாய் ஊடாக நீர்கொண்டு செல்லப்பட விருக்கின்றது. இந்த அபிவிருத்தி திட்டம் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவிருக்கின்றது.
இந்தடிப்படையில் இந்த கால்வாயை அமைப்பதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள உலக வங்கி இக்கால்வாய் அமைப்புக்கான சாத்தியக் கூற்று அறிக்கையைத் தயாரிக்கத் தேவையான நிதியுதவி வழங்கவும் உலக வங்கி இணக்கம் தெரிவித்திருக்கின்றது.