இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம்

ship.jpgகாசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன.  இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புச் சபையின் தற்போதைய தலைவரான மெக்சிகோ நாட்டுத் தூதுவர் கிளவுட் ஹெல்லர் இது குறித்துக் கூறுகையில். ”காசாவை நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல்களின் தொடரணி மீது சர்வதேச கடற்பரப்பில் வைத்து இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பலவந்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்தும் பாதுகாப்புச் சபை தனது ஆழமான கவலைகளை வெளியிடுகின்றது” என்று கூறினார்.

திங்களன்று நடந்த, குறைந்தது 10 சிவிலியன்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்த இந்தத் தாக்குதல் குறித்து பாதுகாப்புச் சபை தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.  இஸ்ரேலால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களும், கப்பல்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் சபை கேட்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து துருக்கிய நாடாளுமன்றதத்தில் உரையாற்றிய அந்த நாட்டு பிரதமர் றெசப் தைப் எர்டோகன் ”இது ஒரு இரத்தக்களரியுடன் கூடிய படுகொலை” என்று கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை கொஞ்சம் தணிவானதாக இருக்க வேண்டும் என்று இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா விரும்புகின்ற அதேவேளை விமர்சனத்தின் தொனி தணிக்கப்படுவதை துருக்கி விரும்பவில்லை. இருந்த போதிலும், இறுதி அறிக்கையில் இருந்த வாசகங்கள் மென்மையாக்கப்பட்டதாக ஐநாவில் உள்ள பாலத்தீன பார்வையாளரான றியாட் மன்சூர் ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

ஐநா விவாதத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நாடுகள் தங்களுடைய சிரமமான நிலைமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளார். அந்தப் பகுதியில் இருக்கும் ஹமாஸ் காரணமாகத்தான் தாம் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார். அப்பாவி சிவிலியன்களை இலக்கு வைப்பது தமது நோக்கமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்

கப்பலில் இருந்த பாலத்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் தம்மை தாக்க முற்பட்ட போது இஸ்ரேலிய படையினர் தற்காப்புக்காகவே தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புச் சபையில் கூறியுள்ளது. ஆனால், சிப்பாய்கள் எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் சம்பவம் இஸ்ரேலுக்கு சர்வதேச சட்டங்கள் தொடர்பாக எந்தவிதமான மரியாதையும் கிடையாது என்பதையே காட்டுவதாக அரபு லீக்கின் தலைமைச் செயலாளரான அமர் மௌசா கூறுகிறார். தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கப்பல்கள் இஸ்ரேலிய துறைமுகமான ஆஸ்டொட்டுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இஸ்ரேலின் பல இடங்களிலும், சுமார் 600 பாலத்தீன ஆதரவுச் செயற்பாட்டாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தாம் ஆயுதங்களை வைத்திருந்ததாக இஸ்ரேலால் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அவர்களில் சில செயற்பாட்டாளர்கள் மறுத்திருக்கிறார்கள். இந்த இராணுவத் தாக்குதல் முழுமையான வெற்றியைப் பெறவில்லை என்று லண்டனுக்கான இஸ்ரேலிய தூதுவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளது.

நன்றி: BBC

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Ajith
    Ajith

    First the UN should investigate the awr crimes, human right abuses and genocide of tamils by the worlds worst terrorist nation called Sri Lanka.

    Reply