சர்வதேச இந்திய திரைப்படவிழா இன்று கோலாகல ஆரம்பம் – கொழும்பில் விஷேட பாதுகாப்பு:

iifa-colombo.jpgசர்வதேச இந்தியத் திரைப்பட விழா இன்று ஆரம்பமாகின்றது. இந்தியத் திரைப்படக் கலைஞர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் கெளரவிக்கும் முகமாக வருடா வருடம் நடத்தப்படும் இவ்விழாவை நடத்துவதற்கென இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 11 சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவதற்கு தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவுஸ்திரேலியா, தென் கொரியா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு இலங்கை இந்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டது.

இன்று இலங்கையில் ஆரம்பமாகும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நாளை மறுதினம் 5ஆம் திகதி விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைகின்றது. இன்று மாலை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சி நடைபெறுகின்றது. இலங்கையின் டைமக்ஸ் கார்மென்ஸின் ‘அவராத்தி’ படைப்புகள் இங்கு அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளன.

iifa-colombo.jpgஏனைய நவநாகரிக ஆடை அலங்காரக்காட்சிக்களில் போலல்லாமல் இந்தியாவின் பிரபல இசை இரட்டையர்களான சலீம் சுலைமான் ஆகியோர் இதற்கு நேரடியாக இசை வழங்குகின்றனர். பிரபல நட்சத்திரங்களான விவேக் ஒபரோய், தியா மிர்ஸா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் சர்வதேச வர்த்தக சங்க மாநாடு நாளை காலை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டை ஆரம்பித்து வைப்பார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்த் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் உட்படப் பலர் இதில் உரையாற்றவுள்ளனர்.

சினிமாத் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்காக சினிமா தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று நாளை காலை கொழும்பு சிலோன் கொண்டினன்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் பிரபல இயக்குனரான ஆர். பல்கி, நடிகர் அனுபம்கீர், நடிகை ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் இதில் பங்குபற்றுவர்.

இந்தியத் திரை நட்சத்திரங்களுக்கும், இலங்கை கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு மிடையிலான சிறுவர்களுக்கான கிரிக்கெட் எனும் தொனிப் பொருளிலான கிரிக்கெட் போட்டி நாளை மதியம் எஸ். எஸ். ஸி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியத் திரை நட்சத்திரங்கள் இரு அணிகளாக, ஹிர்திக் ரோஷன் மற்றும் சுனில் ஷெட்டி தலைமையில் மோதவுள்ளன. இதில் சில இந்தியக் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.

இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்குவார். இதன் மூலம் கிடைக்கும் நிதி சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் விருது வழங்கும் விழா நாளை மறுதினம் சனிக்கிழமை, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஹிர்திக் ரோஷன், சயிப் அலிகான், கரீனா கபூர், பிபாஷா பாஸ¤, ரிதீஷ் தேஹ்முக், விவேக் ஒபரோய், இலங்கையின் ஜக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் அன்றைய தினம் விழாவை அலங்கரிக்கவுள்ளன.

சிறந்த திரைப்படத்துக்கான ‘த்ரீ இடியட்ஸ் வோன்டட்’, ‘டெவ்டி’, ‘காமினி’, ‘பா’ ஆகிய திரைப்படங்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. ‘த்ரீ இடியட்ஸ்’ திரைப்படம் இத் திரைப்பட விழாவில் முக்கிய 13 விருதுகளில் 12 விருதுகளுக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வழங்கப்படும் 8 விருதுகள் ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விருது வழங்கும் விழா ஸ்டார் தொலைக்காட்சி சேவையில் எதிர்வரும் ஜுலை மாதம் 11 ஆம் திகதி ஒளிபரப்பப்படவிருக்கின்றது. சுமார், 110 நாடுகளில் 600 மில்லியன் ரசிகர்கள் இத்திரைப்பட விழாவை ஸ்டார் தொலைக்காட்சியினூடாகக் கண்டு களிப்பர். இந்தியாவில் இருந்து மட்டும் 2000 விருந்தினர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களும், இந்தியத் திரையுலகைச் சேர்ந்த 600 பேரும் இவ் விழாவில் கலந்து கொள்ள வருகின்றார்கள். இலங்கையில் உள்ள ஹோட்டல்களில் 2650 அறைகள் இவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன.

சுகததாஸ உள்ளக அரங்கு 400 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் அந்நாட்டுக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்தது. அதிலும் பார்க்கக் கூடுதல் வருமானம் இம்முறை இலங்கையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *