நாடுகடந்த அரசுத் தேர்தலும் அதன் பிரித்தானியத் தேர்தல் ஆணையமும்! நடந்தது என்ன?

Vijayasingam_TGTEMay_02_Election_TGTE._._._._._.
இவ்வறிக்கை நாடுகடந்த தமிழீழப் பாராளுமன்றத்தின் பிரித்தானிய பிரதிநிதித்துவத்திற்கான தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் பற்றிய உள்விடயங்களை ஆராய்கின்றது. தேர்தல் மோசடி இடம்பெற்றதாகக் கூறி லண்டனுக்கு வெளியே நிராகரிக்கப்பட்ட தேர்தல் நிலையங்களின் உத்தியோகத்தர்களும் பொது மக்களும் இவ்வறிக்கையின் கீழ் கையொப்பம் இட்டு தேர்தல் ஆணையகத்திற்கு ஒப்படைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. மே 31ல் வெளியான இவ்வறிக்கையின் இலத்திரனியல் பிரதி தேசம்நெற்க்கு அனுப்பி வைக்கப்ட்டு இருந்து. அதனை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
._._._._._.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான தேர்தலை முழுமையாக ரத்துசெய்த நிலையானது தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் எந்த ஒரு நிர்வாகமும் செய்ய துணியாத செயல், ஏன் எனில் ஒரு தவறு நடக்கும் பட்சத்தில் அதை உறுதி செய்யப்படாமலும் அங்கு கடமையாற்றிய அதிகாரிகளை மற்றும் வாக்களித்த மக்களை பற்றி எள்ளளவும் சிந்திக்காமலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது வெளியே வாழும் அனைத்து தமிழ் மனங்களையும் நிறையவே புண்படுத்தியுள்ளது. இதற்கு ஒரு படி மேலாக நமது ஊடகமும் என்னவென்று விசாரிக்காமல் வெளிப்படையாக எம்மை தாக்கியது பெரும் வேதனையளிக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு குழப்ப நிலையில் நாம் ஆணையகத்தையும் அதற்கு பொறுப்பானவர்களையும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களையும் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், நம்நிலையை புரியவைக்க முற்பட்ட பொழுதும் அதற்கு இன்றுவரை அவர்கள் வாய்ப்பளிக்கவில்லை. ஆகையால் இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளில் பணிபுரிந்த அனைத்து பொறுப்பானவர்களும் இணைந்து பேசி எடுத்த முடிவாகத்தான் இந்த அறிக்கையை எழுதுகின்றோம். மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் எமக்குள் உள்ள நியாயங்களையும் கேள்விகளையும் மக்களாகிய உங்கள் முன் வைக்கின்றோம்.

எமது தேசத்தின் விடியலுக்காக இந்தத் தேர்தலில் நம்முடன் பணியாற்றியவர்களையும் வாக்களித்த மக்களையும் தேர்தல் ஆணையகமும் தேர்தலை ஒழங்கு செய்தவர்களும் ஒட்டுமொத்தமாக அவமதித்து புண்படுத்திய நிலையிலும் நாம் எல்லோரும் உண்மையாக உழைத்த உங்கள் அனைவர்க்கும் நன்றி கூறுகின்றோம் தொடர்ந்தும் எம்மக்களுக்காக நாங்கள் அனைவரும் ஒன்றாய் நிற்போம்.

பிரித்தானியாவில் லண்டனைத் தவிர்ந்த வெளி மாவட்டத்தில் உள்ள மில்ரன் கீன்ஸ் (Milton Keynes) வாக்களிப்பு நிலையத்தை நோக்குவோம் – S.ஜெயாவின் வாக்குமுலம்:
மில்ரன் கீன்ஸ் தேர்தல் நிலையத்திற்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கலான வாக்குப் பெட்டி மே 1ம் திகதி இரவு 9 மணியளவில் S.ஜெயா ஆகிய எனது வீட்டில் கொண்டுவந்து தந்தார்கள். நான் லண்டனில் உள்ள தேர்தல் ஆணையகத்திற்கு மில்றன் கீன்ஸ் வாக்குச் சாவடி தேர்தல் இணைப்பாளராக பணியாற்றினேன். தேர்தல் ஆணையகத்தின் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக வாக்களிப்பு நிலையத்தில் நாட்டுப்பற்றும், அனுபவமும், தராதரமும் மிக்க பலரின் ஆதரவுடன் பணியாற்றினோம். மீல்ரன்கீன்ஸில் உள்ள மக்கள் தொகைக்குகேற்ப உத்தியோகத்தர்கள் வேலைசெய்தார்கள். தேர்தல் சட்ட நேரப்படி காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு ஜனநாயகமுறையில் பிரித்தானிய ஆங்கிலேயர் (observers) முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இவ் அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே நடைபெற்றது.

இரவு 9மணிரை வாக்குப் பதிவு நடத்தலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும் லண்டன் தேர்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு மூடும்படி திடீரெனக் கட்டளையிட்டார்கள். வாக்காளர்கள் அதிகமாக வந்து கொண்டிருந்ததால் அவர்கள் கட்டளையிட்டபடி 6 மணிக்கு மூட முடியவில்லை என்று என்னால் அறிவிக்கப்பட்டது. மில்ரன் கீன்ஸ் வாக்கு நிலையத்தை உடன் மூடும்படி மாலை 6மணியில் இருந்து தொடர்ச்சியான அழுத்தங்கள் லண்டன் ஆணையகத்தில் இருந்து வந்து கொண்டேயிருந்தது.

இறுதியாக மாலை 7மணியளவில் உங்கள் வாக்கு நிலையம் உடனடியாக மூடாவிட்டால் மில்ரன்கீன்ஸ் வாக்கு நிலையம் நிராகரிக்கப்படும் என அறிவித்தல் வந்ததது. இவ்வளவு நேரமும் வாக்களித்த 1500க்கும் மேற்பட்ட வாக்குரிமைகள் வீணாக்கப்படும் என்ற ஒரே நோக்கம் கொண்டு இரவு 8.05 மணிக்கு வாக்குச் சாவடி முறைப்படி மூடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அனுப்பப்ட்ட “தேர்தல் சாவடி உத்தியோகத்தருக்கான கைப்புத்தகக் குறிப்பில்” 16ம் பக்கத்தில் மூன்றாம் பக்கத்தில் 2010 மே 2ம் திகதி காலை 8 மணிக்கு முன்பும் இரவு 9 மணிக்குப் பின்பும் எக்காரணம் கொண்டும் வாக்குச் சீட்டு விநியோகிக்கூடாது என்று குறிக்கப்பட்டது என்பதை அவதானிப்பாளராக இருந்த ஆங்கிலேயர் அதைச் சுட்டிக்காட்டி 55 நிமிடம் முன்னராக மூடிவிட்டீர்கள், மக்கள் வந்து திரும்பிப் போகின்றார்கள் என ஆதங்கப்பட்டார்.

இரவு 9 மணி 10 நிமிடமளவில் வாக்குச் சாவடியை விட்டு நாம் வெளியேறும் போது தேர்தல் சட்டமுறைப்படி வாக்கு நிலைய அதிகாரியிடம் வாக்குப்பெட்டியும் அனைத்து ஆவணங்களும் கையளிக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் முறையே அனைத்தும் சரிவர இருப்பதை மீளவும் இந்த ஆங்கிலேயரால் உறுதி செய்யப்பட்டபின்னர் வாக்குப்பெட்டி எடுக்க வருபவரிடம் தனது முகவரியைக் கொடுத்து விட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிட்டார். வாக்குப் பெட்டி எடுக்க வருபவர்கள் இரவு 9.30 மணிக்கு எடுக்க வருவதாகக் கூறினார்கள், பின்னர் 3ம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு வருவதாகக் கூறி காலை 6.30 மணிக்குத் தான் வந்து எடுத்துச் சென்றார்கள். இதில் மில்ரன் கீன்ஸ், நோத்கம்ரன், லூட்டன் வெட்போட், ஐஸ்பரி நகரங்களில் உள்ள மக்களும் இங்கு வாக்களித்தனர்.

3ம் திகதி செய்தியை பார்த்தபோது மில்றன் கீன்ஸ், கொவன்றி நிலைய வாக்குப்பெட்டிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் 17 நிலைய வாக்குப் பெட்டிகளும் நிராகரிக்கப்படுகின்றன என்றும் தொலைக்காட்சியில் மில்ரன் கீன்ஸ் (01) வாக்குப்பெட்டியை தொடர்ந்து காட்டிக் கொண்டே கட்டுக்கட்டாக எடுப்பதையும் அதை ஒரு சிலர் கைதட்டி ஆரவாரம் செய்வதையும் காட்டினார்கள்.

அவதானித்தவைகள்:
1. வாக்குப் பெட்டி கவிட்டுக் கொட்டப்படாமல் பக்கவாட்டில் சரிக்கப்பட்டது. அப்போது முன் கூட்டியே வைக்கப்ப்டது போல் இரு வாக்குச் சீட்டு கட்டுக்களை ஒருவர் எடுத்து பிரித்தானியரிடம் கொடுக்க அவர் பார்வையிடுகிறார்.
2. அவர்கள் எடுத்துக் காண்பித்த வாக்குச் சீட்டுக் கட்டு எக் காராணம் கொண்டும் வாக்குப்பபெட்டியின் துவாரத்துக்கூடாக சுயாதீனமாக திணிக்கக் கூடிய அளவிற்கு அதன் துவாரம் பெரிதல்ல.
3. வாக்குப் பெட்டியை வந்து எடுத்தவர்களிடமே முழு ஆவணங்களும், மிகுதி வாக்குச் சீட்டும், வாக்குப் பெட்டியின் திறப்பும் கையளிக்கப்பட்டது.
4. இதற்கு முன்னர் வேறு இரு வாக்கு சாவடிகளுக்காண வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டது. இவற்றிலும் வாக்குச் சீட்டு கட்டுக்கள் இருந்ததாக அறியப்படுகிறது ஆனால் இது வரை அதுபற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளிக் கொணராது திட்டமிட்டு எமக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
5. வாக்கு நிலையத்ததை பார்வையிட்ட தேர்தல் ஆணையத்தால் அனுப்பிவைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆங்கிலேயர், எமது வாக்கு நிலையத்தை அவதானித்து விட்டு முறையாகவும், திருப்தியாகவும் நடைபெறுகின்றது என்று தெரிவித்து கையொப்பம் இட்டுச் சென்றார், பார்வையிட்ட ஆங்கிலேயர் Michel Chadwwick ஆவார்.
6. எந்த முறைகேடுகளும் எமது வாக்குச் சாவடியில் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க எம்மிடம் பல ஆதாரங்கள் உண்டு.

கொவன்றி (Coventry)

எமது வாக்குச் சாவடியில் அனைத்தும் தேர்தல் ஆணையகத்தின் நேரடிப் பார்வையிலேயே சிறப்பாக நடைப்பெற்றுது. அனைத்து விடயங்கலிலும் தேர்தல் ஆணையகம் நேரடியாகவே எம்மை வழி நடத்தினர்.

இருப்பினும் எமக்கு கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் முடிவடையும் தறுவாயில் தேர்தல் ஆணையகத்திற்குத் தொடர்பு கொண்டபோது, தாங்கள் பேர்மிங்காமிற்கு (Birmingham) மேலதிகமான வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் பணித்தனர்.

நாங்கள் போர்மிங்காம் சென்று கேட்டபோது அங்கு பணியில் இருந்த பொறுப்பாளர் யாருடனோ தொடர்பு கொண்டுவிட்டு தேர்தல் ஆணையகத்திற்கு தொடர்பு கொண்டதாகவும் உங்களுக்கு கொடுக்கவேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினார். நாங்கள் யார் கூறினார் என்று கேட்டதற்கு திரு குணாளன் என்பவர் உங்களையும் உள்ளே அனுமதிக்கவும் வேண்டாம் ஒரு வாக்குச்சீட்டும் கொடுக்கவும் வேண்டாம் என்றும் கூறியதாக்ககூறி மீண்டும் நிராகரித்தனர். தர மறுத்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டுவோம், மேலும் போதிய அளவு வாக்குச்சீட்டு எமக்கு தராதது தேர்தல் ஆணையகத்தின் தவறு. மேலும் எந்த குளறுபடியும் எமது வாக்கு சாவடியில் நடைபெறவில்லை என்பதை நாம் உறுதிபடுத்துவோம்.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பட்சத்தில் போட்டிக்கு நின்ற வேட்பாளர்களை அழைத்து அவர்கள் முன்நிலையில் உறுதிசெய்திருக்க வேண்டும் அத்துடன் பெட்டிகள் திறக்கப்படும் பொழுது பாதுகாப்புப் பட்டிகளின் இலக்கங்கள் அனைத்தும் சரிபார்த்திருக்கப்பட வேண்டும். இவை அனைத்தும் நடைபெறவில்லை, வேட்பாளர்களிடம் இது பற்றிய எந்த ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை.

தேர்தல் ஆணையகம் முறைகேடுகள் நடந்தது எனும் பட்சத்தில் வாக்குநிலையத்தில் பணியாற்றிய தேர்தல் நிலைய அதிகாரிகளினதும், அவதானிப்பாளர்களினதும் கருத்துக்கள் கேட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இது வரை எந்த ஒரு கருத்துக்களும் கேட்கபடவில்லை.

கருத்துகணிப்பு வாக்கெடுப்பிற்கு (வட்டுக் கோட்டை தீர்மான) முன் தேர்தல் சம்பந்தமான அனைத்து பயிற்சி முறைககளும் பயிற்சிவிக்கப்பட்டது போல் இங்கு எதுவும் நடக்கவில்லை, மாறாக நாடுகடந்த தமிழீழ தேர்தல் மக்களின் ஆணை பெறவேண்டும் என்ற இலட்சியக் கூறிக்கோளுக்கு மாறாக ஓரிருவரின் அனுசரனைக்காகவும், அவர்களின் சுயநலத்துக்காகவும் நடைபெற்றதாக ஏன் மனசாட்சியுள்ள மனிதர்கள் சந்தேகம் கொள்ள முடியாது.

இந்த தேர்தல் குழறுபடிகளை திட்டமிட்டு நடாத்தியது போலவும், நீண்ட நெடுங்காலமாக மக்களுக்குப் பணிசெய்தவர்களை வீணே அதற்குள் இழுத்து அவமானப்படுத்தி வெளியேற்ற வேண்டும் என்றும் எமது சமூகத்திற்கு முழு மனதுடன் பாடுபடுபவர்களுக்கு இப்படியொரு களங்கத்தை திட்டமிட்டே ஏற்படுத்தியுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இது சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலின்படி எமது இனத்துக்குள் எந்த ஒரு மக்கள் கட்டமைப்பும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் எமக்குள் ஊடுருவி எம்மால் எம்மையே அழிக்கும் புதிய வழிக்கு இந்தத் தேர்தல் துணை போகியுள்ளது.

இலண்டனுக்கு வெளியேயுள்ள பகுதிகளிற்கான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாது நாடு கடந்த அரசின் முதல் அமர்வு நாடாத்த ஒழுங்கு செய்வது எந்த ஒரு ஜெனநாயக மரபிற்கும் உட்பட்டதா என அனுபவமிக்க தேர்தல் ஆணையர் உறுதிப்படுத்துவாரா?

மக்களே கொஞ்சம் சிந்தியுங்கள்.
எது எப்படியிருந்த போதிலும் தாயகதேச நேசிப்பு மிகுதியால் பாணியாற்றியவர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் ஆணையகம் தந்த பிரிசு அவமானமே தவிர வேறொன்றும் இல்லை.

அனுபவம் மிக்க தேர்தல் ஆணையாளர் திரு விஜயசிங்கம் தலைமையில் இருந்த இந்த தேர்தல் ஆணையம் வெளிமாவட்டத்தின் 17 வாக்கு நிலையங்களை நிராகரித்த நிலையானது முன்கூட்டிய திட்டமிட்ட சதியாக இருக்கும் என்று நாம் ஏன் கருதக்கூடாது?

மேற்கூறப்பட்டவைகளை அவதானித்து பார்போமானால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது உண்மை, ஆனால் நிச்சயமாக 17 வாக்கு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களோ அல்லது வாக்காள பொதுமக்களோ இந்த தேர்தலின் முறைகேடுக்கு காரணம் இல்லை. இதற்கு காரணம்
1) தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும்.
2) வாக்கு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகளை எண்ணும் நிலையத்துக்கு எடுத்து செல்லும் வழியிலோ அல்லது எண்ணும் நிலையத்திலோ மட்டுமே முறைகேடுகள் நடந்துள்ளது என்று நாம் நம்புகின்றோம்.

நமதும் மற்றும் வாக்காள பெருமக்களின் கோரிக்கை:
தேர்தல் ஆணையகத்துக்கு பொறுப்பானவர்களும் தேர்தலை ஒழுங்கு செய்தவர்களும், எமது மக்களிடமும் மற்றும் வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகஸ்தர்களிடமும் உடனடியாக மன்னிப்பு கோரவேண்டும். உடனடியாக மறுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • mohan
    mohan

    மில்ற்ரன் கீன்சில் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாமல் நாடு கடந்த தமிழ் ஈழம் தங்கள் கூட்டத்தை நடத்தினது பிழை. இதன் பின்ணணி என்ன எண்டதை> இவர்களைப் புறக்கணிக்க வேண்டிய தேவை என்னவென்று தேசம் அறிந்த எழுதவேண்டும்

    Reply
  • chandran.raja
    chandran.raja

    குதிரைக்கும் வெறி! குதிரைக்காரனுக்கும் வெறி!!. இதைப் போல் தான் இருக்கிறது நாடுகடந்த தமிழ்ஈழமும் அதற்கான தேர்தலும். தேர்தலே முறைகேடாக இருக்கும்போது அதற்குள் வேறு என்ன? முறைகெடு நடந்திட முடியும்?.

    கடந்த மூன்று சகாப்தகாலமாக அரைவாசி கஞ்சிக்காரர்களை கால்வயிறு பக்கிரியாக்கி ஒரு இனத்தையே கேவலநிலைக்கு தள்ளி விட்டவர்கள் ஈழத்தமிழர்களோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனோ அல்ல. ஈழப்போராட்டத்தில் சொகுநிலை வாழ்வை மேற்கொண்டவர்களே!. புலத்திலேயே இன்னமும் உயிர்வாழ்கிறார்கள். இந்த சொத்துடைமையாளர்களின் பிண்னணியிலேயே இந்த தேர்தல்தலும் விடைகளும் அதன் தில்லுமுள்ளகளும்.

    பில்லியன் கணக்காக புலம்பெயர் தமிழ்தலைமைகளிடம் பணபுழக்கம் இருந்த நேரத்தில் அவதிப்பட்ட தழிழர்களுக்கு ஒருநேர கஞ்சியையோ ஒருநேர மருந்தையோ கொடுக்க வக்கில்லாதவர்களே இந்த புலம்பெயர் தழிழரும் அவர்களின் தலைமையும். ஆகவே! இதைப்பற்றிய விமர்சனங்களை கேள்விகளை “தேசம்நெற்” கேட்க முற்பட்டால்..லிட்றில்ஏயிற் போன்ற சேவைகளையும் ஓடுகிற ஆற்றில் சந்தனத்தை கரைப்பதற்கு ஒப்பானதாகும். இதில் கவனம் செலுத்தவேண்டியது யார்? இப்படி போடிபோக்கான செய்திகளை வெளியிடுகிற தேசம்நெற் ஆசிரியர்குழுவே.

    Reply