வங்கதேச தலைநகர் டாக்காவின் மையப் பகுதியில் உள்ள பல நூறாண்டு பழமை வாய்ந்த கயதுலி பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். டாக்காவின் மையப் பகுதியில் உள்ள கயதுலி பகுதி மிகவும் பழமை வாய்ந்த ஒன்று. இங்கு நூற்றுக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள்,வணிக அலுவலகங்கள், ரசாயாணப் பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளன.
இங்கு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் ஒன்றிலிருந்து கிளம்பிய தீப்பொறியால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயாணப் பொருள் நிறுவனங்கள் நிரம்பிய பகுதி என்பதால் தீ படு வேகமாக பரவியது. விடிய விடிய எரிந்த தீயால் அந்தப் பகுதியே சுடுகாடு போலானது. உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினரும், போலீஸாரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். மிகவும் குறுகலான பல சந்துகள் அங்கு உள்ளன என்பதால் அந்தப் பகுதிகளுக்குள் மீட்புப் படையினரால் போக முடியவில்லை.
மிகுந்த சிரமத்திற்கிடையே நடந்த மீட்பு நடவடிக்கையில் 100 பேரின் உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 150ஐத் தாண்டும் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். தீயணைப்பு படையினர் மிகுந்த போராட்டத்திற்கிடையே தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பகுதி முழுவதும் பொசுங்கிப் போய்க்கிடக்கிறது. பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கலாம் எனத்தெரிகிறது. காயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த 1971ம் ஆண்டு டாக்காவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போதுதான் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக டாக்காவாசிகள் தெரிவிக்கின்றனர். டாக்காவை புரட்டிப் போட்டுள்ள இந்த சம்பவத்திற்கு வங்கதேச அரசு பெரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷேக் ஹசீனா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை அவர்நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் பேகம்கலீதா ஜியாவும் மருத்துவமனைக்குச் சென்று காயம் பட்டவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.இந்த பயங்கர தீ விபத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் இறந்துள்ளதால் தீவிபத்துக்குள்ளான மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.