பல்கலைக்கழக தெரிவுக்கான ‘இஸட் ஸ்கோர்’ வெட்டுப் புள்ளிகள் நேற்று பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டன. இதன்படி 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம்முறை சகல பல்கலைக்கழகங்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் மாணவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளதாகவும் ஆங்கிலப் பாடநெறியில் சித்திபெறும் மாணவர்களே பாடநெறிகளுக்கு சேர்க்கப்படுவர் எனவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க கூறினார்.
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று (7) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :-யுத்தம் முடிவடைந்துள்ளதால் நாடு பூராவும் உள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் இம்முறை மாணவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு 6 மாத கால ஆங்கில பயிற்சி வழங்கப்படும். ஆங்கில பரீட்சையில் தோற்று பவர்களே பல்கலைக்கழக பாட நெறிகளுக்கு அனுமதிக்கப்படுவர். பல்கலைக்கழகங்களில் இருந்து பகிடிவதையை முற்றாக ஒழிக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு சகல தரப்பினரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி திறை சேரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் காணப் படும் பாடநெறிகளையும் மாற்ற உள்ளோம். மாணவர்களின் வருகை கட்டாயம் 80 வீதமாக இருக்க வேண்டும். இது குறித்து கவனம் செலுத்தப்படும். ஒழுங்காக பரீட்சை எழுதாதவர்கள் சித்தியடைய தவறியவர்களாகவே கருதப்படுவர்.
இம்முறை மருத்துவ பீடத்துக்கு 1147 பேரும் பொறியியல் பீடத்துக்கு 1223 பேரும் முகாமைத்துவ பீடத்துக்கு 3270 பேரும் கலைப் பிரிவுக்கு 3802 பேரும் தெரிவு செய்யப்படுவர். யாழ் பல்கலைக்கழகத்துக்கு 100 மருத்துவ மாணவர்கள் தெற்கிலிருந்து அனுப் பப்படுவர் என்றார்.