தற்போதைய தருணத்தில் இலங்கைக்கு வெளிமட்டத் தலையீடு அவசியமில்லை – ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பீரிஸ்

gl.jpgஇலங் கையில் இடம்பெற்று வரும் நல்லிணக்க நடவடிக்கைகளில் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்திருக்கிறார்.”இந்தக் கட்டத்தில் இறைமையுள்ள அரசாங்கத்துக்கு தீய நோக்கத்துடனான எந்த சுமைகளையும் ஏற்றக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

லண்டனை தளமாக கொண்ட கேந்திரோபாயக் கற்கைகளுக்கான சர்வதேச நிறுவனத்தால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் அமர்வின் போதே பீரிஸ் இதனை கூறியுள்ளார்.”கிளர்ச்சி எதிர்ப்பும் ஆட்சியை வலுப்படுத்துவதும்” என்ற கருப்பொருளில் அமைச்சர் பீரிஸ் உரையாற்றிய பின்னர் கேள்விக்கணைகள் சரமாரியாக தொடுக்கப்பட்டதாக இந்துப் பத்திரிகை குறிப்பிட்டது.

“இந்தக் கட்டத்தில் வெளிமட்ட தலையீட்டுக்கான எந்தவொரு தேவையும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை”  என்று அவர் குறிப்பிட்டார்.”நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது குறைபாடுகள் தேவைகள் ஏற்பட்டால் நிச்சயமாக எமக்குத் தேவைப்படும் ஆதரவு குறித்து ஐ.நா. முறைமையிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பாக பேசாமல் இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

நீதியான தீர்வை அமுல்படுத்துவது தொடர்பாக சிங்கள மக்களின் மனநிலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூடிய நிலைமையில் இருப்பதாக மேலும் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், 25 வருடங்களில் முதல் தடவையாக முயற்சிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டரீதியான ஆற்றலையும் அரசாங்கம் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மோதலுக்குப் பின்னரான தற்போதைய கட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளுக்கு வலுவான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.கடந்த கால யோசனைகளுக்கு அப்பால் மேலும் விடயங்களை சேர்த்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. மேற்குலகிலும் ஏனைய இடங்களிலுமுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு நாங்கள் விடுக்கும் செய்தியானது அவர்களும் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதாகும். இலங்கையின் வட,கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்படும் உள்சார் கட்டமைப்பு திட்டங்களில் அவர்களையும் பங்கேற்குமாறு நாங்கள் அவர்களுக்கு கூறுகின்றோம்.

அரசியல் தீர்வு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி தொடர்பாக உள்நாட்டு மட்டத்திலான பொறிமுறையே இப்போது மேற்கொள்ளப்படுகிறது. எந்தவொரு வெளிமட்ட அழுத்தமும் இல்லாமல் இது இடம்பெறுகிறது. “அவசரகால ஒழுங்குவிதிகளில் 70 சதவீதமானவற்றை நாம் நீக்கியுள்ளோம்” என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீள ஒருங்கிணைப்பது தொடர்பான யோசனையை அரசாங்கம் கொண்டிருந்தது.அவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாகும். 9 ஆயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப்படக்கூடியவர்களாகும். இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும்.மீதிப் பேரைப் பொறுத்தவரை அவர்களை மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைப்பது தொடர்பாக மிகவும் கவனமாக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டுள்ளோம் என்றும் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *