தமிழ் தேசியக்கூட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது! : விஸ்வா
நேற்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வித இணக்கப்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது. நேற்று (07-06-2010) மாலை அலரி மாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீள்குடியமர்த்தல் ஆகியவிடயங்களுடன், இனப்பிரச்சினைக்கான நிரந்தர திர்வு, அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் கலந்துரையாடலின் போது கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டன. இவற்றிற்கு சாதகமான பதில்கள் எவற்றையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.
போர் காரணமாக நிர்மூலமாக்கப்பட்டுள்ள பொது மக்களின் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுத்தல் தொடர்பாக கேட்டபோது, இவற்றைக் கட்டிக்கொடுக்க அரசாங்கத்திடம் பணமில்லை எனவும், இரண்டு நெல் அறுவடைகளின் பின்னர் மக்களே தங்கள் வீடுகளைக் கட்டிக்கொள்வர் எனவும், விவசாயத்திற்கான உதவிகளை அரசாங்கம் வழங்கும் எனவும் அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவது பற்றிப் பேசப்பட்ட போது, ஏற்கனவே இருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போதும் அவர்களில் ஒருவர் மாத்தறைப் பகுதியில் உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
லண்டனில் உள்ள அமைப்புகள் சில தற்போது ஆட்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும். இந்நிலையில் பொது மன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுதலை செய்தால் அவர்களும் குறிப்பிட்ட அமைப்புக்களில் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படும் நிலை எற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை கூறவில்லை. இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் விடயங்கள் பேசப்பட்ட போது, விடுதலைப்புலிகள் கேட்டவற்றை கேட்கக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இவை தொடர்பான விபரங்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் உட்பட்ட ஏனைய உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
இதே வேளை, இப்பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாக அமைந்ததாகவும், ஜனாதிபதியின் இந்தியப் பயணத்தின் பின்னர் மீண்டும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்தை நடத்த விரும்பவதாக தம்மிடம் கூறியதாகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பின் இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி முதலில் ஜனாதிபதிடம் பேசியதாகவும், அதன் பின்பே அரசியல் விடயங்கள் பேசப்பட்டன என்றும், தாங்கள் கலந்துரையாடிய விடயங்களுக்கு எந்தவொரு இணக்கப்பாடான பதிலையும் ஜனாதிபதி வழங்கவில்லை எனவும், பேச்சக்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பும் ஜனாதிபதியும் உடன்பட்ட விடயங்கள் : வி அருட்செல்வன்
வடக்கு மக்களின் பிரச்சினைகளில் பலவற்றுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் தீர்வைப் பெற்றுத் தர முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. நீண்ட நேரம் மிகவும் சுமுகமாக நடந்த இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
வட பகுதி மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நடமாடும் கச்சேரி முறையொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதன்மூலம் திருமண, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை விரைவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன், தற்போது தடுப்புக் காவலில் உள்ளவர்களில் நீதிமன்ற செயற்பாடுகளின் மூலம் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டவர்களை சமூக வாழ்வில் ஈடுபடுத்தும் திட்டமொன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த பயங்கரவாத சம்பவ காலத்தில் சாதாரண மக்களால் கைவிட்டுச் செல்லப் பட்ட துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உரிமையை உறுதிசெய்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மீள்குடியேற்ற நடவடிக்கை முறையாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும், கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட பின்னர் பாதுகாப் பான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும், இதனால் வட பகுதி மக்களின் நிலை தொடர்பாக கண்டறி வதற்காக பாராளுமன்றத்துக்கு தெரிவான புதிய உறுப்பினர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பிவைத்ததாகவும், இந்த குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குப் பதிலளித்தார்.
அத்துடன் வட பகுதி மக்களை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அறுவடை பெற்றுக் கொள்ளும் வரை அந்த மக்களின் உணவுத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதிகளின் தேவை நிறைவேறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த எவருக்கும் இடம் கிடைக்காது என்றும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் சமாதான நாட்டை உருவாக்கவும், மீண்டும் வடக் கில் மக்கள் அழிவுக்கு உள்ளாகும் யுகத்துக்கு இட்டுச் செல்லப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அதற்கு தேவைப்படுவதாகவும், அனைத்துத் தீர்வுகளும் அனைத்து மக்களுடனும் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்றும், அவசரமாக தீர்வை பெற்றுத் தருவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். இதனால், கிரமமாக திட்டமிடப்பட்ட வகையில் செயலாற்றுவதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இங்கு பேசிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரதேசங்களில் சுகாதாரம், கல்வி, விவசாயம், மீன்பிடி, மத தலங்க ளின் அபிவிருத்தி ஆகியவை பற்றி அவ தானம் செலுத்தப்படுமென குறிப்பிட்டார். இதன்படி 75 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக ளுக்கு விவசாய திணைக்களம் மாகாண சபைகளுக்கு 100 உழவு இயந்திரங்களை வழங்கியுள்ளது. அத்துடன் மேலும் 500 இரண்டு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
எமது முழுமையான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம். தாங்கள் சர்வகட்சி கூட்டமொன்றை கூட்டி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கிaர்கள். தமிழ் மக்களுக்கு சமமாக வாழும் உரிமையை பெற்றுத் தரவும், சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும். தங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எமது விருப்பமாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சி பாராளுமன்றக் குழுத் தலைவருமான ஆர். சம்பந்தன் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட உள்ளதாக ஜனாதிபதியுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.இப்பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் , அகதி முகாம்களில் வசித்து வரும் மக்களின் சுகாதரம் மற்றும் கல்வி, மீளகுடியமர்த்தப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் சார்பில் ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஏ. விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், என். சிவசக்தி ஆனந்தன், பொன். செல்வராஜ், பி. அரியனேந்திரன், யோகேஷ்வரன், பி. பியசேன, சரவணபவன், எஸ். ஸ்ரீதரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் மைத்திரிபால சிரிசேன, பசில் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், நிமல் சிரிபால டி சில்வா, டலஸ் அலஹப்பெரும, மற்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, சரத் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
படங்கள்: ஏசியன் ரிபியூன் – நன்றி