June 7 2010 தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்தித்ததன் பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மாலை 6 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப் படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும், சமவுரிமையும் உள்ள அரசியல் ஏற்பாட்டை நோக்கி செல்வதன் ஊடாகவே அரசயிலுரிமைப் பிரச்சினைக்கு சரியான தீர்வு காணப்படுவது சாத்தியமாகும் என ஈ.பி.டி.பி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இதுவரை காலமும் கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை. இத்தலைமைகளின் தவறான வழிநடத்தல்களுக்காக தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்குத் தீர்வகாணும் விடயத்தை ஒரு போதும் பின் தள்ளிவிட வேண்டாம் எனவும். சகல தரப்பினராலும் ஏற்கக் கூடிய தீர்வுத்திட்ட யோசனையையே தாம் முன்வைத்து வருவதாகவும், தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பி உறவுக்கரம் கொடுத்து வருவதாகவும் ஜனாதிபதியிடம் இப்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்த ஈ..பி.டி.பி யின் விஷேட பிரதிகள் தமிழ் மக்களின் அரசிலுரிமை பிரச்சினை குறித்து எமது நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம் மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும் அரசியல் தீர்வை நடை முறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இச்சந்திப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் தலைமையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா பசில் ராஜபக்ஷ ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால சிறிசேன பௌசி ஆகியோரும் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார். பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் மித்திரன் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி அமைச்சரின் இணைப்பதிகாரி ராஜ்குமார். யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் ஈ.பி.டி.பி யின் விஷேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.