கடந்த ஜுன் 5ம் திகதி (2010) லண்டனில் அ.மயூரனின் “இராமாயணத்தின் வரலாற்று நம்பகத்தன்மை” என்ற நூல் வெளியீட்டுவிழா ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதன் முன்னோடியாக அங்கு ஒரு ஈழத்து நூல் கண்காட்சியும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. “நூல்தேட்டம் வாசகர் வட்டம்” என்ற அமைப்பின்மூலம் அந்தக் கண்காட்சி நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததாக அறியமுடிந்தது.
லண்டனில் நூல் கண்காட்சி என்றதும் முல்லை அமுதனின் “நினைத்தபோது வெளிவரும்” காற்றுவெளி சஞ்சிகையின் வெளியீட்டுடன் இடைக்கிடை நடக்கும் கண்காட்சியும், தமிழ்நாட்டிலிருந்து மணிமேகலை ரவி தமிழ்வாணன் தனது லண்டன் ஏஜென்டுகளின் உதவியுடன் அவ்வப்போது நடத்தும் “புத்தகத் திருவிழா”வும்தான் எமக்கு ஞாபகம் வருவதுண்டு.
நூல்தேட்டம் வாசகர் வட்டத்தின் புத்தகக் கண்காட்சியைக் கண்டதும் ஒரு வித்தியாசமான நூலியல் சூழலுக்குள் நான் உள்வாங்கப்பட்ட உணர்வே மேலெழுந்தது. மண்டபம் முழுக்க கண்டும் கேட்டும் அறிந்திருந்த பழைய புத்தகங்களால் நிரப்பப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற என்னை ஏறத்தாழ 185 தலைப்புக்களில் மூன்றே மூன்று நீண்ட மேசைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களே அமைதியாக வரவேற்றன.
அனைத்தும் தேர்ந்தெடுத்த அறிவியல், ஆய்வு நூல்களாகவே இருந்தன. பழைய ஆக்க இலக்கியகர்த்தாக்களின் பார்த்தும் கேட்டும் சலித்த கதை கவிதை நாவல்களைக் காணவே முடியவில்லை. ஈழத்தின் முதலாவது நாவல் என்ற பெருமையைப் பெற்ற அசன்பேயுடைய சரித்திரம் நாவலினதும், நொறுங்குண்ட இருதயம் நாவலினதும் 2008ம் ஆண்டு மீள்பதிப்பை காணமுடிந்தது. ஏ.இக்பாலின் கவிதைகள் கொண்ட ஒரு நூல் காணக்கிடைத்தது. புரவலர் புத்தகப் பூங்காவின் இரண்டொரு நூல்கள் கிடைத்தன. அவ்வளவுதான் பெரும்பாலும் அங்கிருந்த ஆக்க இலக்கியங்கள்.
எஞ்சிய அனைத்தும், ஈழத்துத் தமிழ் படைப்புலகு பொதுவாக அலட்டிக்கொள்ளாத ஆய்வு நூல்களும், வரலாற்று நூல்களும், அண்மைக்காலத்துப் பல்கலைக்கழக ஆய்வேடுகளின் நூல்வடிவங்களுமே அங்கு பார்வைக்கிருந்து எம்மைப் பிரமிப்புக்குள்ளாக்கின. இவ்வளவு ஆய்வு நூல்கள் இலங்கையில் வெளிவந்திருக்கின்றனவா என்று எனது பிரமிப்பை வார்த்தையாக்கி அங்கு நின்றிருந்த நூலகவியலாளர் செல்வராஜாவிடம் கேட்டுவைத்தேன். அவர் “ இவை அனைத்தும் கடந்த இரண்டாண்டகளுக்குள் வெளிவந்த நூல்கள் மட்டுமே” என்றார்.
உண்மையில் இவை பற்றிய இருப்பினையிட்ட அறிதலே இல்லாமல் புகலிடத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 30 வருடகாலத்தினை யுத்தத்தில் தொலைத்துவிட்டதாகக் கருதிக்கொண்டுள்ள எமக்கு – இல்லை அங்கு மரணத்துள் வாழ்வும் நிகழ்ந்துள்ளது என்ற செய்தியை இந்தக்கண்காட்சியின் மூலம் மௌனமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இக்கண்காட்சியில் பங்கேற்ற இரண்டு பிரதான பதிப்பகங்கள் குமரன் புத்தக இல்லம், சேமமடு பொத்தகசாலை இரண்டுமாகும். சேமமடு பொத்தகசாலை வெளியிட்ட யாழ்ப்பாண அகராதியை அங்கு காணமுடிந்தது. அங்கிருந்த நூல்கள் அனைத்தும் விற்பனைக்கும் உரியதாகையால், கண்காட்சியைப் பார்வையிட வந்தவர்கள் அனைவரது கைகளிலும் பல நூல்கள் தாங்கிக்கிடந்தன.
புத்தகங்களின் விலையும் மிகக்குறைவாகவே குறிப்பிடப்பட்டு இருந்தது. அது பற்றி அங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்மணியிடம் விசாரித்தபோது (இவர் நூலகவியலாளர் செல்வராஜாவின் துணைவியார் என்பதை பின்னர் அறிந்துகொண்டேன்), இவை இலங்கை விலையுடன் லண்டனுக்கு எடுப்பிக்கும் போக்குவரத்துச் செலவையும் கூட்டி வரும் தொகை மட்டுமே என்று குறிப்பிட்டார். மனக்கணக்குப் போட்டுப் பார்த்தேன் கணக்குச் சரியாகவிருந்தது. அப்போ இவர்கள் புத்தக வியாபாரம் செய்யவில்லையா என்ற இயல்பான சந்தேகத்துடன் மீண்டும் நூலகவியலாளரை அணுகினேன். அவரின் பதிலை எனது பாணியில் தருகின்றேன்.
நூல்தேட்டம் வாசகர் வட்டத்தின் நோக்கங்கள் மூன்று:
1. இந்தியப் பதிப்பாளர்களின் கடல்கடந்த பொருளாதார ஆக்கிரமிப்பால், ஈழத்தில் நலிந்துவரும் பதிப்புலகச் சூழலை மீளக்கட்டியெழுப்புவதற்கு பதிப்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவது.
2. ஈழத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ் ஆய்வாளர்களின் படைப்புகளை புலம்பெயர்ந்த நாடுகளில் அறிமுகம் செய்வதும் அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதும்.
3 புகலிடத்தில் அருகிவரும் வாசிப்புக் கலாச்சாரத்தினை தடுத்துநிறுத்தி – அதற்கு மூலகாரணமாக இருக்கும் “அதிக விலை” என்ற காரணியை அகற்றி, மலிவு விலையில் லாபநோக்கம் இன்றி அனைவரையும் நூல்களை வாங்கத்தூண்டுதல். அதற்கு வசதியாக புதிய நூல்களை அவர்களின் தெரிவுக்குப் பெற்றுக்கொடுத்தல்.
இவை அனைத்தையும் இந்தக் கண்காட்சி நிறைவுசெய்துள்ளதை நேரில் காணக்கூடியதாக இருந்தது. கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 45 பவுண்களுக்கு நான் லண்டனில் வாங்கிய சேமமடுவின் யாழ்ப்பாண அகராதி 33 பவுண்களாக விலை குறிப்பிடப்பட்டு இருந்ததைக் கண்டதும் எனக்கு மனதுக்குள் என்னவோ நறநறுத்தது. புத்தகங்களின் விலைகள் 1 பவுணிலிருந்து 7 பவுண்கள் வரை விலை குறிப்பிடப்பட்டிருந்தன. சராசரியாக 2 முதல் 2.50 பவுண்களுக்குள் ஒரு புத்தகம் வாங்கக்கூடியதாக இருந்தது. என்னைப் போலத்தான் மற்றப் பார்வையாளர்களும் சிந்தித்திருப்பார்கள். ஏனென்றால் அனைவரது கைகளிலும் விருப்பத்திற்குரிய தெரிவாகத் தேர்ந்தெடுத்த நிறைய நூல்களைக் காணமுடிந்தது.
வுழமையான கண்காட்சி போன்று ஆண்டுக்கொருமுறையோ, இரண்டாண்டுகளுக்கொருமுறையோ அல்லது விரும்பியபோதோ அமையாமல், ஒவ்வொரு நூல்வெளியீட்டு விழாவிலும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இடம்பெற வேண்டும். லண்டனில் ஒரு புத்தக விற்பனை நிலையம் இல்லாத குறையை அது போக்க உதவும் என்பதுடன், வீடுகள் தோறும் குடும்ப நூலகங்களும் உருவாகும் வாய்ப்பு ஏற்படும்.
வாசிப்பில் ஆர்வம் வந்துவிட்டால் ஈழத்துப் படைப்புலகத்திற்கு வெள்ளிதிசைதான். இதில் லண்டனில் உள்ள சைவ, கிறிஸ்தவ ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் தங்களை இணைத்துக்கொள்வது நல்லது. தாங்கள் வாழ வழிதரும் தமிழ்ச் சமூகத்துக்கு அவர்கள் செய்யும் கைம்மாறாக இருக்கும். புரிந்துகொள்வார்களா?
தமிழ் வாதம்
இவ்வாறான தனிப்பட்ட வருவாயற்ற, பொதுநல நோக்கிற்கான செய்திகள், செயற்பாடுகள் பற்றி முன்னமே அறிவிப்பும், கருத்துகள் பரிமாறலும் நடத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நோக்கம் நன்றெனின் ஊக்கம் தரல் நலம். வருங்காலத்தில் இதைக் கருத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.
Kumar
இதுபோன்ற புத்தகக் கண்காட்சிகள் அடிக்கடி இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. லண்டன் பாரிஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புத்தகங்களை அச்சடித்துவிட்டு விநியோகிக்க மார்க்கமின்றி தவித்திருக்கும் எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்த தேசம் முன்வரலாமே? ஒரு புத்தகக் கண்காட்சியை -எழுத்தாளர்களை அவர்களது நூல்களில் கொஞ்சம் பிரதிகளை கொண்டுவரச்செய்து அவற்றை ஒரு மண்டபத்தைப் பெற்று அதில் காட்சிப்படுத்தி விற்பனையும் செய்யலாம். அன்றையதினம் ஈழத்துத் தமிழர்களின் நூல்வெளியீடு விநியோகம் தொடர்பான காத்திரமான கருத்துப் பகிர்வொன்றையும் ஏற்பாடு செய்யலாம். இலங்கையிலிருந்து சில பதிப்பகங்களையும் வரவழைத்து ஒரு முழு நாள் நிகழ்வாக நடத்தலாம். உதவுவீர்களா? மணிமேகலையின் புத்தகத்திருவிழாவும் இம்மாத இறுதியில் லூஷியத்தில் நடக்க இருக்கிறதாம். கேள்விப்பட்டீர்களா?