இந்தியா வுக்கும் இலங்கைக்குமிடையே பொருளாதாரம், சமூகத்துறை, நீதித்துறை, மகளிர் விவகாரம், மின்சாரம், போக்குவரத்து ஆகிய துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் நேற்று (09) மாலை ஹைதராபாத்திலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பின் போதே மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சிறுகைத்தொழில் தொடர்பாக ஏற்கனவே இருந்துவந்த உடன்படிக்கையை புதுப்பிக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை முதலில் கைச்சாத்தானது.
இலங்கை வெளியுறவு அலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் நீதித்துறை உதவிகள் தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கை யின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இந்தியாவின் உள் துறை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஸ்ரீ. ஜீ. கே. பிள்ளையும் கைச்சாத்திட்டனர்.
மகளிர் வர்த்தக நிலையம் மற்றும் சமூக ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்கு மிடையிலான கலாசார பரிமாற்றம் தொடர்பான உடன்படிக்கை, மற்றும் இந்தோ – லங்கா மின்சார கட்டமைப்பு தொடர்பான சாத்திய ஆய்வு உடன்படிக்கை ஆகியவற்றில் இலங்கையின் சார்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசமும் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவும் கைச்சாத் திட்டனர்.
மன்னாரில் இருந்து மடு வரையிலான ரயில் பாதைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையின் சார்பாக ரயில்வே பொது முகாமையாளர் பி. பி. விஜேசேகரவும் இந்தியாவின் சார்பில் ரயில்வே பாதை முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீமோஹன் திவாரியும் கைச்சாத்திட்டனர்.