வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள சிறிய தாழமுக்கம் காரணமாக புயல் சின்னம் உருவாகும் அபாயம் உள்ளபோதும் எவ்வகையிலும் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்படமாட்டாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள இத்தாழமுக்கம் காரணமாக தமிழ் நாட்டுக்கே அதிகளவு மழை பெய்யும். இலங்கைக்கு தென் மேற்கு பருவ பெயர்ச்சி மழையுடன் காற்று சற்று வேகமாக வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.
குறிப்பாக தென் மாகாணம், சப்பிரகமுவ மாகாணம், மத்திய, மேல் மாகாணங்களுக்கு அதிகளவு மழை வீழ்ச்சி ஏற்படும். நேற்றும், இன்று காலை வேளைகளிலும் வீசிய கடும் காற்றின் வேகம் இன்று மாலை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனவும் அவதான நிலையம் தெரிவிக்கிறது.
இதேவேளை வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்:- கேரளாவிலும், தமிழகத்தின் கேரளாவையொட்டியுள்ள பகுதிகளிலும் தென் மேற்குப் பருவ மழை வலுத்துள்ளது. கர்நாடகத்திலும் மழை தொடங்கி பெய்து வருகிறது.
சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டது. இதனால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.