மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வரும்போது சிறுபான்மைச் சமூகங்களின் நலன் குறித்து அதிகளவு சிந்தித்துச் செயற்பட வேண்டுமென வலியுறுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்புத் திருத்தம், தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் அரசு சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்தும் யோசனையை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது தொடர்பாக கேட்டபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.ரி.ஹஸன் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் விளக்கமளித்த ஹஸன் அலி கூறியதாவது;
அரசாங்கம் அதன் சொந்த நலன்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியிலிறங்கியுள்ளது. இவ்வாறான சுயநல நோக்கத்தின் பிரதிபலன் சிறுபான்மை மக்களுக்குப் பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.
இது தொடர்பிலான அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கைகளைப்பொறுத்தே எமது கட்சி எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியும். அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுவிட்டால் மாத்திரம் அரசியலமைப்பை மாற்றிவிட முடியாது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கான யோசனைகளை அது தயாரித்து பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
அரசியலமைப்புத் திருத்தமோ, தீர்வுத்திட்டமோ, எதுவாக இருப்பினும் அவற்றை நிறைவேற்றுவதற்கு முன்னர் அரசின் யோசனைகள் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டறிய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாக அவை அமைய வேண்டும்.அரசியலமைப்புத் திருத்தம் தீர்வு விடயங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பிலுள்ள சிறுபான்மைத் தலைவர்கள் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய முக்கியத்துவத்தையும் இங்கு நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். வெறும் கை தூக்கிகளாக அவர்களால் செயற்பட முடியாது. தமது சமூகங்களுக்குத் துரோகமிழைக்கப்படக்கூடிய முடிவுகளுக்கு அவர்கள் துணைபோய்விடக்கூடாது.
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் அரசு அதன் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஆராய்ந்த பின்னரே அடுத்த நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி தெரிவித்தார்.