தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டுமெனத் தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, சிங்கள மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் ராஜத் துரோகிகளுக்கு இவ்வாறுதான் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
மாத்தளை மாவட்ட அபிவிருத்தி ஒன்றிணைப்புக் குழுக்களின் கூட்டம் புதிய தலைவரும் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் வசந்த பெரேரா தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது அங்கு திடீரென வருகை தந்து உரையாற்றுகையிலேயே மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு பேசுகையில் மேலும் கூறியதாவது;
பிரபாகரனை எவ்வாறாயினும் கொன்றொழிக்க வேண்டும் என முதலில் கூறியவன் நான். அதேபோல் சரத் பொன்சேகாவின் பிரசாரக் கூட்டம் களனியில் நடைபெற்றபோது கூக்குரல் இட்டவனும் நானே.தேசத் துரோகியான சரத் பொன்சேகாவை பகிரங்கமாக சுட்டுக் கொல்ல வேண்டும்.
பிரித்தானிய அரசாங்கம் இலங்கை இராணுவம் தொடர்பாக விவாதம் ஒன்று நடத்த வேண்டுமென்று கோரியுள்ளது. இதற்குக் காரணகர்த்தா யார்? சரத் பொன்சேகாதான். நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டும். எமது நாட்டிலிருப்பது ஐந்து நட்சத்திர ஜனநாயகம். சரத் பொன்சேகாவை சுட்டுக் கொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அலவாங்கில் ஏற்றிக் கொல்ல வேண்டும் என்று பகிரங்கமாகவே கூறுகிறேன்.
ராஜத் துரோகிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனைதான் இது.சிங்கள மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வாறுதான் மரணதண்டனைகள் வழங்கப்பட்டன.
காலை வாரிவிடுவது, சதிநாசம் செய்வது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது என்பது மிகவும் மோசமான துரோகமாகும். இத்தகையோருக்கும் உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை வெற்றிகரமாக அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.
நமது நாட்டை ஆட்சி செய்த வலகம்பா அரசன் உட்பட மகா பராக்கிரம பாகு அரசர்கள் உள்ளிட்ட பல சிங்கள அரசர்கள் இவ்வாறு உரிய தண்டனைகள் விதித்துத்தான் நட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை நினைவுபடுத்த விரும்புகிறேன்.