“யுத்தம் முடிவிற்கு வந்த ஓராண்டு கடந்து விட்டது. எமது நிலையை பல வழிகளில் அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளோம் உருக்கமான பல கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். உண்ணாவிரதங்கள் பலவற்றை நடத்தி எமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளோம். அதிகார பீடத்திலுள்ளவர்கள் எமக்கு வாக்குறுதிகள் தந்து எம்மை சமாதானப்படுத்தினார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை. எமது நம்பிக்கைகள் யாவும் பொய்த்துப்போயுள்ளன”
இவ்வாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள் அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மகஸின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி மகஸின் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள தமிழ் கைதிகளை சந்தித்தமை குறிப்பித்தக்கது. அப்போது அங்குள்ள தமிழ் கைதிகள் அவரூடாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மனு ஒன்றினை அனுப்பி வைத்தனர்.
அம்மனுவில் தெரிவிக்கப்படுள்ள விடயங்கள்:
”பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் வேதனைகளை தாங்கள் அறிவீர்கள் . பலர் சட்ட நடவடிக்கைகள் எதுவுமின்றியும் ஏனையோர் சட்ட நடவடிக்கைகளுக்குள்ளான நிலையிலும் உள்ளோம். இது தொடர்பான விபரங்கள் அடங்கிய பட்டியலை இத்துடன் இணைத்துள்ளோம்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலுள்ள நாம் பல்வேறு சிறைகளிலிருக்கும் தமிழ் கைதிகள் சார்பாக இக்கடிதத்தை எழுதுகின்றோம். யுத்தம் முடிவடைந்து ஓராண்டு கடந்து விட்ட நிலையில் எமது நிலையை பல வழிகளில் அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறியும் எவ்வித பயனுமில்லை. நாம் எமது குடும்பத்தினரோடு இணைந்து வாழத் துடிக்கின்றோம். புதிய எண்ணங்களுடன் வாழத் துடிக்கின்றோம். எமக்கு விடுதலை கிடைக்கும் நாளுக்காக ஏங்குகின்றோம்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னியில் சரணடைந்த இயக்க உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவது பாராட்டுக்குரியது. இது போன்று எம்மீதும் அரசின் பார்வை திரும்புமா? அல்லது, மறுவாழ்வு என்பது எமக்கு மறுக்கப்பட்டு விட்டதா? தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் தங்களின் மேலான கவனித்திற்கு இவ்விடயததைக் கொண்டு வருகின்றோம்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 7ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கம் இடையில் நடைபெற்ற சந்திப்பில் சிறைளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதiலை குறித்து கூட்டமைப்பினர் பேசிய பொது ஜனாதிபதி அது தொடர்பாக உறுதியான பதில் எதனையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.