ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்களாதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றது. முதலில் ஆடிய பங்களாதேசம் 34.5 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா 30.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கண்டது.
இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை தம்புல்லவில் இந்திய அணி பங்களாதேச அணியை எதிர்கொண்டது. நாணயசுழச்சியில் வென்ற பங்களாதேசம் முதலில் பெட்டிங்செய்தது. ஆரம்பஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸýம் களம் இறங்கினர். 3-வது ஓவரில் தமீம் ஆட்டம் இழந்தார். அவர் 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்து முகமது அஸ்ரப்உல் 20 ஓட்டங்கள் பெற்று பெவிலியன் திரும்பினார். அடுத்து இம்ருல்லுடன் ரஹீம் ஜோடி சேர்ந்தார். 16-வது ஓவரில் இம்ருல் விக்கெட்டை பறி கொடுத்தார். அவர் அணியில் அதிகபட்சமாக 37 ஓட்டங்கள் (35 பந்துகள்) எடுத்தார். 17-வது ஓவரில் வங்கதேசம் 100 ஓட்டங்களைக் கடந்தது. அப்போதிருந்த நிலையில் அந்த அணி 250 ஓட்டங்கள் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்வரிசை ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்தனர். 155 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேசம் 167 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 34.5 ஓவரிலேயே அந்த அணி சுருண்டது. இந்திய தரப்பில் சேவாக் 2.5 ஓவர்கள் பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
168 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சேவாக் 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். 10-வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்தபோது மைதானத்தில் உள்ள விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டதால் போதிய வெளிச்சம் இல்லை. எனவே ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது விராட் கோலி 11 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த ரோஹித் சர்மா முதல் பந்திலேயே ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து கம்பீருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி பொறுப்பாக விளையாடினார். 30.1 ஓவரில் இந்திய அணி 158 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. அப்போது கம்பீர் ஆட்டம் இழந்தார். அவர் 101 பந்துகளில் 82 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து ரெய்னா களம் கண்டார். 30-வது ஓவரில் 3 மற்றும் 4 -வது பந்துகளை அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டி கேப்டன் தோனிஇ வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களை எடுத்தார். இதன் மூலம் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேசத்தை வென்றது.
38 ஓட்டங்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கம்பீர் ஆட்ட நாயகனாகத் தேர்வானார். இந்த வெற்றி மூலம் இந்திய அணி போனஸ் புள்ளிகளையும் சேர்ந்து மொத்தம் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.