இலங்கைக்கு வழங்கும் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்தத்திற்கு பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் வடக்கு கிழக்கு மக்களின் மேன்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த வரி நிவாரணத்தை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்த ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி இடைநிறுத்த ஒன்றியம் இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய முடிவுக்கு அமைய எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 200 பொருட்களை வரி விலக்குடன் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்தை அடுத்து ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நிதியமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பிரசல்ஸ் சென்று இலங்கை சார்பில் நியாயங்களை முன்வைத்திருந்தனர்.