செம்மொழி மாநாட்டு சின்னமான திருவள்ளுவர் உருவத்துடன் கூடிய 1330 திருக்குறளையும் 11 ஆயிரம் அரிசியில் வரைந்து கோவை ஒவிய ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.
கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்வரும் 23ம் திகதி தொடங்கி 27ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் பலர் பல்வேறு சாதனை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் கோவை உப்பிலியாளையத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் எம். மனோகரன் என்பவரும் அரிசியில் திருக்குறள் முழுவதையும் எழுதி சாதனை படைத்து உள்ளார். அன்னை தமிழுக்கு அணி செய்யும் வகையில், ஏதாவது ஒரு வகையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது. இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு வாய்ப்பாக வந்தது.
இதனால், எனக்குள் இருந்த எண்ணம் செயலாக மாறியது. அந்தச் செயல் தற்போது சாதனையாக உருவெடுத்து உள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு சினமான திருவள்ளுவரை மைய மாக வைத்து அவரை சுற்றிலும் அறம், பொருள், இன்பத்தை உணர்த்தும் 1330 திருக்குறளையும் அரிசிகளின் மீது எழுதினேன். ஒவ்வொரு அரிசியிலும் ஒரு வார்த்தை இருக்கும். மிகவும் நுட்பமான எழுத்தை, நுட்பமான பொருளான அரிசியில் எழுதுவதற்கு நான் கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. சிறு இடுக்கியால் அரிசியை பிடித்துக் கொண்டு, லென்சை பயன்படுத்தி எழுத்துக்களை எழுதினேன்.
இந்த எழுத்துக்களை எழுதுவதற்கு ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேகமான இங்க், மற்றும் பேனாவை பயன்படுத்தினேன். கடந்த மாதம் 17ம் திகதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமையிலும், பிள்ளையார் பீடம் மணி வாசகம் அடிகளார் முன்னிலையிலும் எனது சாதனை முயற்சியை தொடங்கினேன்.
செம்மொழி மாநாட்டு இலட்சினையை (சின்னம்) உருவாக்க 9670 அரிசிகளும், எண்களுக்கு 1330 அரிசிகளும், மொத்தம் 11 ஆயிரம் அரிசிகள் தேவைப்பட்டன.