தமிழில் நூல் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்ட வரலாறு சுவாரஸ்யமானது.முதலாவது தமிழ் நூல் 1578 அக்டோபர் 20 ஆம் திகதி வெளிவந்தது. அன்றைய தினம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி மூலம் போர்த்துக்கேய மிசனரியான ஹென்ரிக் ஹென்ரிக்குயஸ் (அன்ரிக் அன்ரிக்குயஸ்) “தம்பிரான் வணக்கம்” என்ற நூலை பிரசுரித்துள்ளார்.
16 பக்கங்களுடன் 10 14 செ.மீ. புத்தகம் பிரசுரிக்கப்பட்டதாகவும் அதன் ஒவ்வொரு பக்கமும் 24 வரிகளைக் கொண்டதாக இருந்ததாகவும் அதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருவானது ஓலைச்சுவடிகள், கற்களில் பயன்படுத்தப் பட்டவையெனவும் தமிழ் வரலாற்றியலாளரான புலவர் எஸ்.ராஜு கூறியதாக “இந்து” பத்திரிகை நேற்று {21.06.2010 }திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.
பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “டொக்ரினா கிறிஸ்தம்” என்ற நூலின் மொழி பெயர்ப்பே இந்த நூலாகும். தமிழில் பிரார்த்தனை நூலொன்று இருக்க வேண்டுமென்ற அருட்தந்தை ஹென்றிகுயஸின் முயற்சியின் பெறுபேறாகவே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார்.
1556 இல் போர்த்துக்கல்லிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி கொல்லத்தில் இந்த நூல் அச்சிடப்பட்டது.இந்திய மொழியில் பிரசுரிக்கப்பட்ட முதலாவது நூல் இதுவென ராஜூ சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் முதலாம் ஸ்ரீரங்க ராயர் (15781586)இமைசூர் ஆட்சியாளர் ராஜா உடையார் (15781617), மதுரை ஆட்சியாளர் வீரப்பநாயக்கர் (15721595) தஞ்சாவூர் ஆட்சியாளர் அச்சுதப்ப நாயக்கர் (15721614) ஆகியோரின் காலகட்டத்திலேயே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் தகவல்களை வெளியிடுவதற்கு செப்புத்தகடுகள், கற்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
“தம்பிரான் வணக்கம்” நூலுக்கு முன்னர் தமிழ் நூலொன்று பிரசுரிக்கப்பட்டிருந்ததாயினும் அது போர்த்துக்கேய எழுத்துருவிலேயே இருந்தது. கார்த்திலா, லின்கோயா தமிழ், வோர்த்துக்கேயஸ் என்ற அந்த நூலானது போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் அச்சிடப்பட்டதாக ராஜு கூறுகிறார்.
அருட்தந்தை ஹென்ரிக்குயஸ் போர்த்துக்கல்லின் விப்பாவிகோ சாவில் 1520 இல் பிறந்தவர். போர்த்துக்கல்லிலுள்ள கொய்ம்பிரா பல்கலைக்கழகத்தில் கற்ற பின்னர் 1546 இல் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். தமிழில் மிகவும் பிரியமுடையவரான அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது “ஆமென்” என்பதனை “ஓம்” என்று மாற்றியதாக ராஜு கூறுகிறார்.
“கிறிஸ்ரியானி வணக்கம்” (1579),”கொன்பெசனாரியோ” (1580), “அடியார் வரலாறு”(1586) ஆகிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். புன்னைக்கயலில் 1600 பெப்ரவரி 6 இல் அவர் இறந்தார். அவரின் பூதவுடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் நீண்டகாலம் சென்ற பின்பே அதிகளவு நூல்கள் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார். தமிழில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறளாகும். (1812) இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அச்சமயம் சென்னை கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வைற் எலிஸ் என்பவராகும். சென்னை கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தவரும் அவரேயாகும்.
அச்சுக்கூடங்களை ஸ்தாபிக்க இந்தியர்களுக்கு 1835 இலேயே அனுமதி வழங்கப்பட்டது.