வடக்கில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை குழப்ப சிலர் முயற்சி- அமைச்சர் பசில்

basil.jpgஅரசாங்கம் வடபகுதியில் ஏற்படுத்தியுள்ள சமாதான சூழ்நிலையை தெற்கில் படுதோல்வி அடைந்துள்ள சில அரசியல் கட்சிகள் குழப்புவதற்கு முயற்சி செய்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இப்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புணர்வுடன் செயற்படுவதுடன் அரசாங்கத்தின் மீள்குடியேற்ற வேலைத் திட்டங்களில் இணைந்து செயற்பட முன்வந்திருப்பதையிட்டு அவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேனெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2010ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை அரசாங்கத் தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

சர்வதேச நாணய நிதியம் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு தான் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை வழங்குகின்றது. அவர்கள் எமக்கு எந்த நிபந்தனையும் விதிக்காமல் தான் நிதியுதவி வழங்குகின்றார்கள்.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆகிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களில் நாம் நிதியுதவி பெறுகின்றோம். நாம் அந்த நிறுவனங்களில் உறுப்புரிமையைப் பெற்றிருப்பவர்கள் என்ற அடிப்படையில் தான் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளுகின்றோம். நாம் இந்நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக எந்த அரச நிறுவனத்தையும், சொத்தையும் தனியார் மயப்படுத்த மாட்டோம். நாட்டு மக்களுக்கு வழங்குகின்ற நிவாரணங்களையும், மானியங்களையும் குறைக்க மாட்டோம்.  அரச துறையில் ஆட்குறைப்பு செய்ய மாட்டோம் போன்றவற்றை அந்நிறுவனங்களுக்கு தெளிவாகக் கூறி வைத்துள்ளோம். நாம் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் நிதியுதவி கேட்போம். அதற்காக நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும், தனித்துவத்தையும் ஒருபோதும் காட்டிக் கொடுக்க முடியாது. இவ்விடயத்தில் ஜனாதிபதி தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருந்த போது சர்வதேச நிதி நிறுவனங்களில் நிதியுதவி பெற்ற போது நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் பெற்றனர். 1980 களில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியைப் பெற்றுக் கொள்ளுவதற்காக ஐ. தே. க. ஆட்சியாளர்கள் ஹோட்டல் துறை, யுனைட்டட் மோட்டர்ஸ் உட்பட பல அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தினார்கள்.

1990ம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுக்கொள்ளவென பசளை மானியத்தை நிறுத்தினார்கள். எஞ்சி இருந்த அரச நிறுவனங்களையும் தனியார் மயப்படுத்திட இணங்கினார்கள். அவ்வாறு நாம் ஒருபோதும் செயற்பட்டது கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களின் விருப்பப்படி செயற்படுகின்றது. அதன் காரணத்தினால் தான் எல்லாத் தேர்தல்களிலும் ஜனாதிபதி தலைமையிலான ஐ. ம. சு. மு. அமோக வெற்றிபெற்று வருகின்றது. ஐ. தே. க. மக்களிடமிருந்து தூரமாகி வருகின்றது. மூன்று தசாப்த காலப் பயங்கரவாதத்தை ஒழித்து நாடுபூராகவும் தேசியக் கொடி பறக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளோம்.
 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *