கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான் : ஐ.நாவிடம் புகார் கொடுக்கும் அதிமுக – ஜெயலலிதா.

jaya.jpgமுதல்வர் கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை:

இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபை தலைவரின் இந்த நடவடிக்கை, இலங்கையில் உள்ள தமிழ் இனமும், தமிழ் மக்களும் இன்னமும் அனைத்தையும் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

ஐநா சபையின் பிரதிநிதிகள் குழுவிற்கு நுழைவிசைவு தருவதை இலங்கை அரசு தனது இயல்பிற்கு ஏற்ப மறுத்து வருகிறது. இது இலங்கை அரசின் குற்ற உணர்வை வெளிப்படுத்துகிறது. ராஜபக்ஸ அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல ஆட்சேபணை தெரிவிக்கக் கூடாது.

பான் கி மூன் அறிவித்துள்ள மூவர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள். இவர்கள் சுதந்திரமாக இலங்கைக்குள் புக அனுமதிக்கப்பட்டால்,  இந்த மேன்மை மிகுந்த குழு ராஜபக்ஸவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக் கொணரும் என்பதில் ஐயமில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமையை தீர்த்துக்கட்டியதை அடுத்து, 19.5.2009 அன்று இலங்கை உள்நாட்டுப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பே, 27.4.2009 அன்று தமிழக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும் வழியில், திடீரென்று அண்ணா நினைவிடம் அருகில் தன்னுடைய பிரயாணத்தை நிறுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என்று அறிவித்தார் கருணாநிதி. கன ரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின்னர் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் கருணாநிதி.

மக்கள் முதல்வரை நம்பினார்கள். தமிழக மக்கள் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நம்பினார்கள். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் முதல்வரின் வார்த்தையை நம்பி போர் முடிந்துவிட்டது என்று நினைத்து பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள் கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்!

நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ, அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பிவிடும் செயல் போர்க் குற்றமாகும் என சர்வதேச சட்டம் கூறுகிறது.

போர் நிறுத்தம் ஏற்படாத போது, போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திற்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அவர்களை கொலை செய்ய இலங்கை அரசுக்கு உதவி புரிந்திருக்கிறார் முதல்வர்.

ராஜபக்ஸ சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் என்று கருதப்படுகிறார்களோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான்.

எனவே, இலங்கைக்கு ஐ.நா. குழுவினர் வரும்போது அதிமுக சார்பில் ஒரு குழுவை அனுப்பி கருணாநிதி குறித்து புகார் தரப்படும். கருணாநிதி போர்க்குற்றம் இழைத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்போம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • கந்தையா
    கந்தையா

    இவவுக்கும் ஒரு வருடம் எடுத்திருக்கு இதைக் கண்டுபிடிக்க.

    ராஜபக்ச சகோதரர்கள் ராணுவத்தினர் மட்டுமல்ல கருணாநிதியும் மனித உரிமைகளை மீறினவர் எனகூறும் ஜெயலலிதா புலிகளின் மனித உரிமை மீறல்களைப்பற்றி முச்சுவிடவில்லை. ஏன் என்பதை டெமொகிறசி கவனிக்கவும்

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஒரு காலத்தில் பெயர் பெற்ற கதாநாயகி நடிகையாக வலம் வந்தவர், இன்று காமெடித்தனமான இவரது அறிக்கைகளால் காமெடி நடிகையாகவே மாறி வருகின்றார்.

    Reply
  • BC
    BC

    இவருக்கு தான் இனிமேல் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை அடியோடு போய்விட்டது என்பது தெரிகிறது. கதாநாயகியாக ஆரம்பித்து நகைச்சுவை நடிகையாக முடிவடைகிறார்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ராஜபக்சா சகோதரர்கள் மற்றும்இராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர் குற்றவாளிகளோ அதே போல கருனாநிதியும் போர்குற்றவாளி தான்// Democracy.
    இது உண்மையென்றால்… முப்பது வருடம் ஒரு கிறிமினலை தேசியத் தலைவராக அனுமதியளித்த தமிழரரும் அதற்கு பொருளாதார வழங்களை அள்ளி வழங்கிய புலம்பெயர் தமிழரும் போர்குற்றவாளிகளே!
    முதாலிளித்துவத்தின் சீர்கேடுகளுக்கும் அதனால் உற்பத்தியாகும் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டை விட வேறு உதாரணங்களை தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை. இந்த சினிமாகூத்தாடிகளின் கும்மாளங்களுக்கு வரப்போகும் நாட்கள் காத்திரமாக விடையளிக்கும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.கந்தையா!, புலிகள் “தமிழ்நாட்டு தமிழர்களுக்கு” எதிராக “வன்னி மக்கள்” மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை!. “வன்னி மக்கள்” என்பது தமிழ்ச்சமூகம் என்று நீங்களளெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகத்தின் ஒரு “இருதயைப் பகுதியாகும்”, அதன் அழிப்பு சடாரென்று நிகழ்ந்த அதிர்ச்சியாகும். புலிகளின் “ஷாக் அண்ட் ஆவ்” கருவைப் பற்றி அரசல் புரசலாக அறிந்திருந்தாலும், இதை தமிழக மக்கள் எதிர்பார்க்கவில்லை!. இதை மறப்போம் மன்னிப்போம் என்று புலம்பெயர்ந்த டமில் போரம்கள் கருதும் போது, இதன் தொடர்ச்சியாக “இரண்டாம் முள்ளிய வாய்க்கால்” நடைபெறாமல் தடுக்க, மனித உரிமைகள்? மீது வெளிச்சம் பாய்ச்சுவதே என் நோக்கம்- நீண்ட ஆராய்ச்சிகள் அல்ல.
    தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் முள்ளிய வாய்க்காலில், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டாரா என்பது டமில் போரம்களின் பிரச்சனை. ஆனால், இரண்டாம் முள்ளியவாய்க்காலின் திசையின் மீது இருந்து அவரும்?, அவருடைய புதல்வியும் கையை உதறிவிடுவார்கள் என்றால், வாயைப் பொத்திக் கொள்கிறேன்!.

    Reply
  • கந்தையா
    கந்தையா

    புலிகள் தமிழ்நாட்டு அரசியலில் அரசியல்வாதிகளில் தங்கியிருக்கவில்லை அல்லது நம்பியிருக்கவில்லை என பொருள்பட டெமொகிரசி வேறொரு கட்டுரையில் வாதிட்டிருந்தார். இங்கே ஜெயலலிதா புலிகளை கண்டக்காத மாதிரி அறிக்கை விடுகிறா. அதைத்தான் குறிப்பிட்டென் டெமொகிரசிக்கு.

    புலிகள் எப்பவும் அதிமுக ஆதரவாளர்கள். அவர்களையே இப்பவும் நம்பியிருப்பவர்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மேல் குறிப்பிட்ட கட்டுரை யாரால் எழுதப்பட்டது? ஏன் டெமக்கிராஸியின் பெயர் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. தேசம்நெற் விளக்கம் தரமுடியுமா?.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.கந்தையா!,புலிகள் அல்ல “இலங்கைத் தமிழர்கள்” தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை, “சிங்களவர்களை விட(இலங்கையர் என்ற சமூக விஞ்ஞான “டெஃபனிஷ்ன்” அடிப்படையில்), நம்பியது கிடையாது (ரியல் பாலிட்டிக்ஸ் கன்டெக்ஸ்டில்), என்றுதான் கூறியிருந்தேன்!. ஈழத்தமிழர்கலைவிட, தி.மு.க. வுக்கும், அதிமுகா வுக்கும் நெருக்கம் அதிகம். இதை நான் குறிப்பிட காரணமும், “சிங்களவர்கள், தங்கள் அங்கமான இலங்கைத் தமிழர்களை கையாண்ட விதம்”, தங்கள் அங்கத்தின் ஒரு பகுதியை அறுத்துக் கொண்டு ஊனமானதற்கு சமம், என்ற அடிபடையிலேயே பொருள்படும்!. பிரபாகரன் – பிரேமதாஸா உறவு, குமரன் பத்மநாதன் – மகிந்த ராஜபக்ஷே உறவு, வெறும் இந்திய “எதிர்ப்புணர்வின்” அடிப்படையில் மட்டும் அமைந்ததன்று!, (விரிவாக ஆராயப்படவேண்டியது), அது “ரியல் பாலிட்டிக்ஸ்(நடைமுறை அரசியல்) அடிப்படையில் அமைந்த ஒன்று.

    Reply