மலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரக் குடியிருப்பின்றித் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
வரவு- செலவுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டதும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.
தற்காலிகக் குடியிருப்பில் உள்ளவர்களுக்குக் காணிகள்
பெற்றுக்கொடுக்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு பிரிவு, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், நிர்வாக ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.
தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதில் முன்பு முறைகேடுகள் இடம்பெற்றதாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நிரந்தரமாகக் குடியிருப்பு வசதிகள் இருப்பவர்கள் காணிகளைப் பெற்றுக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து சரியானவர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாகக் குழுவை அமைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.