உலக கோப்பை தொடரில் “கால்பந்து இமயம்’ பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.
இத்தொடர் துவங்கும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ, அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி, அவரை சேர்க்க மறுத்தார். விளைவு…?
முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.கடந்த 2002ல் கோப்பை வென்ற பிரேசில் அணி, 2006ல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.