இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பாடசாலைத் தோழி சாக்ஷிராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இவ்விழாவில் டோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர். சாக்ஷிராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி. ஏ. வி. பாடசாலையில் படித்தவர். தோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பாடசாலை காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வுபெற்றபின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டது.
இருவருக்கும் இடையே திருமண திகதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என தோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும் அநேகமாக ஆஸி., தொடருக்குப் பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்னும் 2 நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தொவிக்கப்பட்டது. பின்பு திடீரென நேற்றிரவு திருமணம் நடக்குமென அறிவிக்கப்பட்டது.
தோனியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான தோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்துவரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.